யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வராக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவாகியுள்ளார். மாநகரச சபையின் முதலாவது கூட்டம்.
இன்று நடைபெற்ற போது, தலைவர் தெரிவை இரகசிய வாக்கெடுப்பின் மூலம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. இதன்படி முதலாம் வாக்கெடுப்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் இமானுவேல்.
இமானுவேல் ஆர்னோல்டுக்கு 18 வாக்குகளும், ஈ.பி.டி.பியின் முடியப்பு ரெமீடியஸ் மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் விஷ்வலிங்கம் மணிவண்ணன் ஆகிய இருவருக்கும் தலா 13 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.
ஒரே அளவான வாக்குகளைப் பெற்ற விஷ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் முடியப்பு ரெமீடியஸ் ஆகியோரில், குழுக்கள் முறையில் ரெமீடியஸ் தெரிவு செய்யப்பட்ட போதும், முதல்வருக்கான போட்டியில் இருந்து அவர் விலகினார்.
இதனை அடுத்து வாக்கெடுப்பு இன்றி இமானுவேல் ஆர்னோல்ட், யாழ்ப்பாண மாநகரசபையின் முதல்வராக தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் யாழ்ப்பாண மாநகர துணை முதல்வராக துரைராசா ஈசன் தெரிவாகியுள்ளார்.
இதேவேளை, கொட்டகலை பிரதேச சபைக்கான முதல்வராக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணித் தலைவர் ராஜமணி பிரசாந்த் தெரிவாகியுள்ளார்.
கடந்த உள்ளுராட்சித் தேர்தலில், இந்தசபையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 7 ஆசனங்களையும், ஐக்கிய தேசிய கட்சி 6 ஆசனங்களையும் பெற்றிருப்பதுடன், ஜேவிபி, சிறிலங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் கட்சி என்பன தலா ஒரு ஆசனத்தைப் பெற்றிருந்தன.
இந்தநிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸானது சிறிலங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் கட்சி என்பவற்றின் ஒத்துழைப்புடன் அங்கு ஆட்சியமைத்துள்ளது.
இதன்படி இன்று நடைபெற்ற பிரதேச சபையின் முதலாவது கூட்டத்தின் போது, ராஜமணி பிரசாத் சபையின் முதல்வராகவும், சுரேஷ் துணை முதல்வராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.