யுத்த நினைவுச் சின்னங்களை பார்க்கும் போது, மக்களின் மனநிலைகள் பாதிக்கப்படுவதனால், அதனை அகற்றுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தது உண்மையே என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்தில் உள்ள யுத்த நினைவுச் சின்னங்களை அகற்றுமாறு கடந்த 14ஆம் திகதி முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் வினவியபோதே முதலமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
நினைவுச் சின்னங்களை அகற்றுமாறு கோரியது உண்மையே. நினைவுச் சின்னங்கள் சிங்கள மேலாதிக்கத்தினை எடுத்துக்காட்டுகின்றன.
அதோடு இந்த நினைவுச் சின்னங்களை அகற்றினால் கூடிய சமாதான சூழலை உருவாக்கக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றதாகவும் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த விடயத்தில் ஜனாதிபதி என்ன விதமான கருத்தினைக்கொண்டுள்ளார் என்பது பற்றித் தெரியாது. ஆனால், இதனை விடயங்களைச் சொல்ல வேண்டிய கடப்பாடு தனக்கு இருக்கின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நினைவுச் சின்னத்தினைப் பார்க்கும் போது, மக்கள் பழைய நினைவுகளினால் துன்பப்படுகின்றார்கள் என்றும், எனவே அவற்றினை நீக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுள்ளார்.
எனினும் ஜனாதிபதியிடம் இருந்து இதுவரையில் எந்தப்பதிலும் கிடைக்கவில்லை என்றும் முதலமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.