யோஷித ராஜபக்ஷ வின் பிணை மேல் நீதிமன்றால் நிராகரிப்பு!

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு கடுவலை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்ட லெப்டினன்ட் யோஷித ராஜபக் ஷ உள்ளிட்ட சந்தேக நபர்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டமையானது சட்டவிரோதமானது என இடைக்கால உத்தரவொன் றினை பிறப்பிக்குமாறு யோஷிதவின் சட்டத் தரணிகள் முன் வைத்த கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.

அத்துடன் யோஷித்த உள்ளிட்ட நால்வரின் பிணை மனுக்கள் தொடர்பில் எதிர்வரும் மார்ச் 8 ஆம் திகதி முதல் விவாதங்கள் ஆரம்பிக்கப்படுவதாகவும், அதன் பின்னர் இரு தரப்பு வாதங்களையும் ஆராய்ந்து பிணை தொடர்பில் தீர்ப்பு வழங்குவதாகவும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆர். ஹெய்யந்துடுவ அறிவித்தார்.

சி.எஸ்.என். நிறுவனத்தின் ஆரம்ப மூலதனமான 234 மில்லியன் ரூபா எவ்வாறு சம்பாதிக்கப்ப்ட்டது என்பது தொடர்பில் விளக்கமளிக்காததை அடிப்படையாகவும் போலி ஆவணங்களை தயாரித்தமை, திட்டமிட்டு நம்பிக்கை துரோகம் செய்தமை , திட்டமிட்ட மோசடி, சுங்க சட்டத்தை மீறியமை மற்றும் நிறுவன சட்டங்களை மீறியமை, அரசாங்க சொத்துக்களை தவறாக பயன்படுத்தியமை ஆகிய குற்றச் சாட்டுக்களின் கீழும் யோஷித்த உள்ளிட்ட 8 சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு கடுவலை நீதிவான் நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் கடந்த 25 ஆம் திகதி இறுதியாக வழக்கு விசாரணைகள் இடம்பெற்ற போது யோஷித்த ராஜபக்ஷ, சி.எஸ்.என். தலைவராக கருதப்படும் ரொஹான் வெலிவிட்ட, பிரதம நிறைவேற்று அதிகாரி நிஸாந்த ரணதுங்க, அதன் பணிப்பாளர்களான கவிஷான் திஸாநாயக்க, பெர்ணான்டோ ஆகியோரின் விளக்கமறியல் எதிர்வரும் மார்ச் 10 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டது.

இந் நிலையில் நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்க மறுத்ததால் கடந்த 15 ஆம் திகதி திங்களன்று யோஷித்த ராஜபக்ஷ மற்றும் ரொஹான் வெலிவிட்ட சார்பில் சட்டத்தரணி அத்துல டி சில்வாவினால் கொழும்பு மேல் நீதிமன்றில் பிணைக் கோரிக்கை மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டன. தொடர்ந்து சி.எஸ்.என். பணிப்பாளர்களான கவிஷான் மற்றும் பெர்ணான்டோ ஆகியோர் சார்பிலும் பிணை மனுக்கள் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டன்.

இந்த நான்கு மனுக்களிலும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் செனவிரத்ன, சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். இந் நிலையில் இந்த மனுக்கள் மீதான இரண்டாம் தவணை விசாரணைகள் ஒன்றன் பின் ஒன்றாக நேற்று விசாரணைக்கு வந்தன

கொழும்பு மேல் நீதிமன்றின் ஆறாம் இலக்க அறையில், நீதிபதி ஏ.ஏ.ஆர். ஹெய்யந்துடுவ முன்னிலையில், இது குறித்த வழக்கு விசாரணைகள் நேற்று காலை யில் விசாரணைக்கு வந்தன. இதன் போது முதலில் யோஷித ராஜபக்ஷ, ரொஹான் வெலிவிட்ட ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் ஒன்றன் பின் ஒன்றாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஏனைய இரு மனுக்களும் விசாரணைக்கு எடுக்கப்பட்டன.

நேற்றைய வழக்கு விசாரணைகளின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சட்டத்தரணிகள் உடையுடன் மன்றில் ஆஜராகியிருந்தார்.

வழக்கு விசாரணையின்போது எழுந்த அரசின் சிரேஷ்ட சட்டவாதி துஷித் முதலிகே ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பனவின் வாதங்களை நிராகரித்தார். குறித்த மனுவின் இறுதி தீர்ப்பை மனுதாரர்கள் இடைக்கால உத்தர்வொறூடாக அடைந்துகொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என வாதிட்டார். அத்துடன் ஜனவரி 30 ஆம் திகதி உத்தரவுக்கு மேலதிகமாக பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி வழங்கப்பட்ட உத்தரவும் இங்கு பார்க்கப்படல் வேண்டும் எனவும் துஷித் முதலிகே வாதிட்டார்.

இதனையடுத்து நீதிவான் ஏ.ஏ.ஆர். ஹெய்யந்துடுவ திறந்த மன்றை அழைத்து பின்வருமாறு அறிவித்தார்.

‘ இங்கு கடுவலை நீதிவானினால் வழங்கப்பட்ட இரு உத்தரவுகள் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. முதலாவது உத்தரவு கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்டது. பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி மற்றைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஜனவரி 30 ஆம் திகதி கடுவலை நீதிவானினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சட்ட விரோதமானது என இந்த வழக்கின் மனுதாரர்கள் கூறுகின்றனர். அப்படியாயின் குறித்த வழக்கு தொடர்பில் ஆராயப்படல் வேண்டும்.

உண்மையில் கடுவலை நீதிமன்ற வழக்குடன் இரு சட்டங்கள் தொடர்புபடுகின்றன.

ஒன்று 2006 ஆம் ஆண்டின் 5 அம் இலக்க கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டமாகும். மற்றையது 1982 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டமாகும்.

கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் 17 ஆம் அத்தியாயத்தில் அந்த சட்டத்தின் கீழான குற்றங்கள் தொடர்பில் கூறப்பட்டுள்ளன. அதில் பிணை வழங்க முடியாத குற்றங்கள் தொடர்பிலும் குற்றவியல் தண்டனை சட்டக் கோவையின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியுமான குற்றங்கள் தொடர்பிலும் கூறப்பட்டுள்ளன.

இந் நிலையில் இங்கு பிணை சட்டத்தின் அத்தியாயங்களும் ஆராயப்படல் வேண்டும். பிணை சட்டத்தின் 3 ஆவது அத்தியாயத்தில் ஒரு பிரத்தியேக ஏற்பாடு அல்லது விதிவிலக்கு கூறப்பட்டுள்ளது. அதாவது, விஷேட சட்டங்களில் பிணை தொடர்பில் விஷேடமாக குறிப்பிடப்பட்டிருப்பின் பிணை சட்டம் அந்த சட்டங்களின் கீழான குற்றங்கள் தொடர்பில் பயன்படுத்தப்பட முடியாதது என்பதே அந்த விதிவிலக்காகும்.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் பிணை சட்டத்தின் 2 ஆம் அத்தியாயத்தின் பிரகாரம் பிணை வழங்க முடியாது.

இதனை விட பிணை சட்டத்தின் 14 ஆவது அத்தியாயத்தில் பிணை நிராகரிக்கப்படும் நான்கு சந்தர்ப்பங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

சந்தேக நபர் விசாரணைகளுக்கு அச்சுறுத்தலாக இருத்தல், சாட்சியங்களுக்கு அச்சுறுத்தலாக இருத்தல், பாதிக்கப்பட்ட தரப்புக்கு அச்சுறுத்தலாக இருத்தல், பிணையின் போது குற்றத்தில் ஈடுபடுதல் போன்றவற்றை கருத்தில் கொண்டு பிணை மறுக்கப்படல் முடியும் என்பதே அச்சட்டத்தில் உள்ள விடயங்களாகும்.

இந் நிலையில் கடுவலை நீதிவான் சந்தேக நபர்களின் பிணை நிராகரிக்கப்படுவதற்கான காரணிகளை எழுத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழான பிணை ஏற்பாடுகள் தொடர்பிலும் நாம் இங்கு ஆராய வேண்டும். எனினும் கடந்த ஜனவரி 30 ஆம் திகதியன்று இச்சட்டம் பயன்படுத்தப்படவில்லை.

ஜனவரி 30 ஆம் திகதி உத்தரவுடன் இணைத்து அன்று மன்றில் முன் வைக்கப்பட்ட பீ அறிக்கையினையும் அதற்கு முன்னைய நாள் முன் வைக்கப்பட்ட பீ அறிக்கையினையும் நாம் பார்க்க வேண்டும்.

அந்த அறிக்கைகளில் சந்தேக நபர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனவும், அவர்களை விடுவிப்பதால் மேலதிக விசாரணைகள் பாதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை நீதிவான் அவதானத்தில் கொண்டுள்ளார். சந்தேக நபர்கள் மீதான குற்றச் சாட்டுக்கள் பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டம் மற்றும் கறுப்புப் பண சுத்திகரிப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் உள்ளன. அத்துடன் அவர்கள் விசாரணைக்கும் ஒத்துழைக்கவில்லை என நீதிவான் நீதிமன்ற நீதிபதியினால் பிணை மறுப்புக் கான காரணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் 5 (1) பிரிவின் பிரகாரமும், கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் 03 (1) 8 (அ) பிரிவுடன் கூறப்படும் சட்டத்தின் 3 (2) ஆம் பிரிவு மற்றும் தண்டனை சட்டக் கோவையின் 101,113,386,389,452 மற்றும் 453 ஆகிய அத்தியாயங்களின் கீழும் குற்றமொன்றை புரிந்துள்ளதாக தெரிவித்தே நீதிவான் நீதிமன்ற நீதிபதியினால் பிணை நிராகரிக்கப்ப்ட்டுள்ளது.

உண்மையில் இங்கு பிணை சட்டத்தின் 14 ஆவது அத்தியாயமே ஆராயப்படல் வேண்டும். அப்படியாயின் கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் திகதியன்று தாக்கல் செய்த பீ அறிக்கையில், விசாரணைகளுக்கு உண்மை தகவல்களை வழங்காமை, விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தியமை, வங்கி கணக்கு விபரங்களை வழங்காமை உள்ளிட்ட காரணிகள் சுட்டிக்கடடப்பட்டுள்ளன. அதனையே நீதிவான் சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைப்பதற்கான காரணிகளாக அன்றைய தினம் கொண்டுள்ளதாக நான் கருதுகிறேன்.

இந் நிலையில் நீதவான் நீதிமன்றின் ஜனவரி 30 உத்தரவை சட்ட விரோதமானது என அறிவிக்க முடியாது. இங்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஊடாக இறுதி தீர்ப்பாகவே அந்த உத்தரவு மனுதாரரால் எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அதன் நடவடிக்கையினால் சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்படல் வேண்டும் என்பதே அவர்களின் எதிர்ப்பார்ப்பாகும்.

அப்படியானால் இடைக்கால உத்தரவொன்ரின் ஊடாக வழக்கின் இறுதித் தீர்ப்பை வழங்குவது என்பது அசாதாரணமானது. எனவே இந்த விடயம் குறித்து இரு தரப்புக்களும் வாதங்களை முன் வைக்கலாம். அதற்காக வழக்கை மார்ச் 8 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கின்றேன் என அறிவித்தார்.

இதே உத்தரவு யோஷித்த தவிர்ந்த ஏனைய மூவர் தொடர்பிலும் செல்லுபடியாகும் எனவும் நீதிவான் அறிவித்தார்.

இதனிடையே சி.எஸ்.என். விவகாரத்தில் கைதாகி விளக்கமறியலில் உள்ள நிஸாந்த ரணதுங்க தாக்கல் செய்துள்ள பிணை மனு மேல் நீதிமன்றின் 7 ஆம் இலக்க அறையில் நீதிபதி மொறாயஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அம்மனுவும் எதிர்வரும் 8 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டது.

இந் நிலையில் மனுதாரர்களான யோஷித்த ராஜபக்ஷ மற்றும் ரொஹான் வெலிவிட்ட அகியோர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி காமினி எஸ். மாரப்பனவின் தலைமையில் கடந்த தவணையில் ஆஜரான 15 சட்டத்தரணிகள் மன்றில் பிரசன்னமாகியிருந்தனர். ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க, ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸ, சட்டத்தரணிகளான கனேஷ் தர்மவர்தன, நவின் மாரப்பன, காஞ்சன ரத்வத்த, சம்பத் மென்டிஸ், கெளசல்யா மொல்லிகொட, இசுரு சோமதாஸ, கிம்ஹான விக்ரமசுரேந்திர, சமிந்த குலரத்ன, விஜேசிரி அம்பவத்த,பிரேமசந்திர ஏப்பா, நாமல் ராஜபக்ஷ, உசித விக்ரமசிங்க ஆகியோரே இவ்வாறு யோஷித்த மற்றும் ரொஹான் வெலிவிட்ட ஆகியோர் சார்பில் ஆஜராகியிருந்தனர்.

ஏனைய இரு மனுதாரர் சார்பிலும் ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்திரதிஸ்ஸவின் கீழ் ஹர்ஷ நாணயக் கார, நிரோஷ சிறிவர்தன உள்ளிட்ட சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.

பொறுப்புக் கூறவேண்டியவர்களான நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட அரச சட்டவாதி துஷித் முதலிகே மன்றில் ஆஜராகியிருந்தர்.

கடந்த தவணையின் போது மனுதாரரான யோஷித்த உள்ளிட்டோர் சார்பில் முன் வைக்கப்பட்ட வாதங்களுக்கு பதிலளிக்கும் விதமாக எழுத்து மூலமான பிரதிவாதங்களை வழக்கு விசாரணைகளின் ஆரம்பத்திலேயே சிரேஷ்ட அரச சட்டவாதி துஷித் முதலிகே நீதிபதியிடம் கையளித்தார். அத்துடன் அதன் பிரதியொன்றினை பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகளுக்கும் வழங்கினார்.

இதன் போது தனது ஆசனத்தில் இருந்து எழுந்த யோஷித்த ராஜபக்ஷவின் சட்டத்தரணி காமினி மாரப்பன பின்வருமாறு கருத்துக்களை முன் வைத்தார்.

உண்மையில் கடந்த ஜனவரி 30 ஆம் திகதி கடுவலை நீதிவான் வழங்கிய உத்தரவே இந்த மனுவை இன்று தாக்கல் செய்ய வைத்துள்ளது. அவரது உத்தரவுகள் அடங்கிய அந்த ஆவணத்தின் 88 ஆவது பக்கத்தின் இறுதி பந்தியை நோக்கி உங்கள் அவதானத்தை கொண்டு செல்கிறேன். அதில் இரு தரப்பு வாதங்களையும் கருத்தில் கொன்டு சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைப்பதாக கூறும் நீதிவான், பின்னர் எமது கோரிக்கைகளுக்கு அமைய பிணை தொடர்பில் பெப்ரவரி 11 ஆம் திகதி தீர்மானிப்பதாக கூருகின்றார். எனினும் அவர் எமது பிணை கோரிக்கையினை நிராகரிக்கவில்லை. பிணை சட்டத்தின் 14 (2) அத்தியாயத்துக்கு அமைய பிணை நிராகரிக்கப்படாது சந்தேக நபர் ஒருவரை விளக்கமறியலில் வைக்க முடியாது.

அத்துடன் அரசியலமைப்பின் 13 (2) அத்தியாயத்தில், சட்டத்துக்கு உட்பட்ட விடயங்களுக்கு அப்பால் ஒரு மனிதனின் சுதந்திரத்தை பறிக்கும் வகையில் செயற்பட முடியாது.

இந் நிலையில், இங்கு சட்ட விரோத உத்தரவொன்றின் ஊடாக எமது கட்சிக் காரரின் சுதந்திரம் பறிக்கப்ப்ட்டுள்ளது. உங்கள் மன்றில் நாம் நீதி வேண்டி வந்துள்ளோம்.

முதலாவது சட்ட விரோத உத்தரவினாலேயே அடுத்தடுத்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. எனவே கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி கடுவலை நீதிவான் பிறப்பித்த உத்தரவு சட்ட விரோதமானது என இடைக்கால உத்தர்வொன்றினை பிறப்பிக்குமாறு நாம் இந்த மன்றைக் கோருகின்றோம். கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதியன்று எமது கட்சிக் காரர்களுக்கு இருந்த சுதந்திரம் மீண்டும் அந்த இடைக்கால உத்தரவூடாக ஏற்படுத்தப்படல் வேண்டும்.’ என வாதிட்டார்.

நிராகரிப்புபிணைமேல் நீதிமன்றம்யோஷித ராஜபக்ஷ
Comments (0)
Add Comment