இலங்கை அதிபர் ராஜபக்சவை ஐ.நா.வில் பேச அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக வைகோ வெளியிட்ட அறிக்கையில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா.வின் மனித உரிமை ஆணையம் மார்ட்டி அட்டிசோரி உள்ளிட்ட மூவர் விசாரணைக் குழுவை அறிவித்தது.
ஆனால், ஐ.நா. விசாரணைக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டேன் என்று ஆணவத்தோடு ராஜபக்ச கூறிவிட்டார். எனவே, ஐ.நா.வில் ராஜபக்சவை பேச அனுமதிக்கக் கூடாது. ஐ.நா. மன்றம் அமைத்த விசாரணைக் குழுவை இந்தியாவில் தமிழ்நாட்டில் விசாரணை மேற்கொள்ள இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ் ஈழம் அமைப்பது தொடர்பாக ஈழத் தமிழர்களின் பூர்வீகத் தாயகத்திலும், புலம் பெயர்ந்தோர் வாழும் நாடுகளிலும் ஐ.நா. மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். தமிழக மீனவர்களுக்குக் கேடு செய்யும் இலங்கை அரசின் கொட்டத்தை அடக்க வேண்டும். இலங்கையில் தமிழர் பகுதியில் சிங்கள குடியேற்றம் நடைபெறுவதைத் தடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, என் (வைகோ) தலைமையில் வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று காலை 11 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.