ரூ.14 கோடி செலவில் தேனியில், மாவட்ட சிறைச்சாலை அமைக்கப்படும் என்று சட்டசபையில் ஜெயலலிதா அறிவித்தார். சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தேனி மாவட்டத்தில் மாவட்ட சிறைச்சாலைகள் ஏதும் இல்லாததால் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த சிறைவாசிகள் தற்போது மதுரை மத்திய சிறைக்கும், வளரிளம் சிறைவாசிகள் மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள பார்ஸ்டல் பள்ளிக்கும் கொண்டு செல்லப்படுகின்றனர்.
எனவே, இச்சிறைவாசிகளை தேனி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் ஆஜர்படுத்துவதில் உள்ள இடர்பாடுகளைக் களையவும், மதுரை மத்தியச் சிறை மற்றும் பார்ஸ்டல் பள்ளியில் இட நெருக்கடியைக் குறைக்கவும், 14 கோடி ரூபாய் செலவில் தேனி மாவட்டத்தில் 200 சிறைவாசிகள் தங்கும் வகையில், ‘பார்ஸ்டல்’ பள்ளியை உள்ளடக்கிய ஒரு மாவட்டச் சிறை அமைக்கப்படும்.
சிறைப்பணியாளர்களின் குடியிருப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஆண்டு தோறும் 100 குடியிருப்புகள் கட்ட அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. அதன்படி 2012-2013 மற்றும் 2013-2014-ம் ஆண்டுகளில் தலா 100 குடியிருப்புகளை கட்ட அரசு ஆணையிட்டுள்ளது.
அக்கொள்கை முடிவின் தொடர்ச்சியாக, 2014-2015-ம் ஆண்டில் 13 கோடியே 16 லட்சம் ரூபாய் செலவில் 100 குடியிருப்புகள் கட்டப்படும். எனது தலைமையிலான அரசின் மேற்காணும் நடவடிக்கைகள், சிறைவாசிகள் மற்றும் சிறைத்துறைப்பணியாளர்கள் கூடுதல் வசதி பெற வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.