வடக்கு கிழக்கு தாயக பூமிக்கு சுயநிர்ணய அதிகாரம் தேவை: விக்ரமபாகு

சுய நிர்ணய அதிகாரங்கள் வழங்கும் வகையில் புதிய அரசியல் சாசனம் அமைய வேண்டுமென புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமாயின், தமிழ் மக்களின் அபிலாஸைகள் மற்றும் விருப்பு வெறுப்புக்கள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கு தயாக பூமிக்கு சுயாட்சி அதிகாரங்களுடன் கூடிய சுய நிர்ணய அலகு ஒன்றை வழங்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

புதிய அரசியல் சாசனம் அமைப்பது தொடர்பிலான மக்கள் கருத்தரியும் குழுவிடம் தமது கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.நாட்டின் இராணுவத்தின் சிங்களவர்கள் இருப்பதாகவும் தமி;ழ் முஸ்லிம்களும் உள்வாங்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா இராணுவத்தின் படைப்பிரிவுகள் அனைத்து சிங்களப் பெயர்களையும் சிங்கள விடயங்களையும் குறிக்கும் வகையிலேயே அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறைந்தபட்சம் இராணுவத்தில் தமிழ் பேசும் ஓர் படையணியாவது இருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கத்தின் ஏதேச்சாதிகார போக்கில் மாற்றம் செய்யப்பட வேண்டுமாயின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்பட்டு, பாராளுமன்றிற்கு பொறுப்புக் கூறக்கூடிய ஆட்சி முறைமை அறிமுகம் செய்யப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

சதாரண பொதுமக்கள் எவ்வித அச்சமும் இன்றி வாழக்கூடிய ஜனநாயக பின்னணி உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய வகையில் புதிய அரசியல் சாசனம் அமைய வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

சுய நிர்ணய உரிமைசுயாட்சிதாயகம்வடகிழக்குவிக்கிரமபாகு
Comments (0)
Add Comment