திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ம.தி.மு.க. பொதுச் செயலாளரும், மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:–
தமிழ்நாட்டில் கடந்த ஆட்சி காலத்தில் எங்கள் கட்சி, திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்து சில இடங்களில் போட்டியிட்டது. தற்போது மக்கள் நலக்கூட்டணி, தே.மு.தி.க., தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறோம். தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் மட்டுமே மாறி, மாறி ஆட்சி செய்து கொண்டு இருக்கிறது.
1967–க்கு பிறகு தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பெரிய கூட்டணியாக மக்கள் நல கூட்டணி உருவாகி இருக்கிறது. மக்கள் நலக்கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என சிலர் வதந்தி பரப்பி வருகிறார்கள். அவற்றை எல்லாம் பொய்யாக்கி எங்கள் கூட்டணி மாபெரும் வெற்றியை பெரும். எங்கள் கூட்டணி தொடங்கப்பட்ட போது இருந்த வாக்கு சதவீதத்தை விட தற்போது வாக்கு சதவீதம் அதிகரித்து இருப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவித்து வருகிறது. மக்கள் நல கூட்டணி தேர்தல் அறிக்கையை கட்சி நிர்வாகிகள் துண்டு பிரசுரங்களாக தயார் செய்து அவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
அதில் உள்ள ஒவ்வொரு வாக்குறுதியும் மக்களின் மனநிலையை மாற்றும். நாங்கள் ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தப்படும். திராவிட கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக 234 தொகுதிகளிலும் கோடி கணக்கில் பணத்தை தயார் நிலையில் வைத்து உள்ளார்கள். இதை இரவோடு இரவாக 10 நிமிடத்தில் பட்டுவாடா செய்வதற்கு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதை தேர்தல் அதிகாரிகள் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். மேலும் வாக்காளர்கள் பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும். பின்னர் ஆற்காட்டில் வைகோ பிரசாரம் செய்தார்.
அப்போது பேசியதாவது:– எங்கள் கூட்டணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை பார்த்து தி.மு.க. கலக்கமடைந்துள்ளது. இலங்கையில் லட்சக்கணக்கான மக்களை இன படுகொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து தி.மு.க. திட்டமிட்டு ஒரு வேலையை செய்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு விவசாயிகள் மண்டல மாநாட்டில் 94 விவசாய சங்கங்கள் தே.மு.தி.க.– மக்கள் நலக்கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் நிறைவேற்றியது.
இதுகுறித்து தெளிவுபடுத்த வரும் 10–ந் தேதி சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடக்கிறது. வேட்பாளர் ஓட்டு கேட்கும் போது கொடுக்கும் தேர்தல் அறிக்கையில், வேட்பாளர் படமும், பெயரும் பெரிய அளவில் போடாமல் 6 கட்சி தலைவர்களின் படங்களையும் சின்னங்களையும் போட்டு முக்கியமாக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளதை பெரிய எழுத்தில் போட்டு அதனை 100 பேருக்கு மேல் கடைகள் மற்றும் வீடுகளுக்கு சென்று விநியோகம் செய்ய வேண்டும். நோட்டீஸ் விநியோகிக்கும் போது யாரும் குடித்துவிட்டு போகக் கூடாது. ஒருவர் குடித்து விட்டு சென்றாலும் அனைவருக்கும் கெட்ட பெயர் ஏற்படும். ஆற்காடு பகுதியில் மணல் கொள்ளை அதிகளவு நடக்கிறது. நாங்கள் ஓட்டுக்காக பணம் தந்து வேட்பாளர்களை கடன்காரர்களாக ஆக்க மாட்டோம். இந்த தேர்தலில் மக்கள் தெளிவாக உள்ளனர். அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்ச போகிறது. இவ்வாறு அவர் பேசினார்.