இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 25 வருடங்களாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த வலி வடக்கில் மரங்கள் அழிக்கப்பட்டு இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அண்மையில் விடுவிக்கப்பட்ட பலாலி வயாவிளான் மற்றும் தையிட்டி மக்களளே இவ்வாறு கூறுகின்றனர்.
தாம் 25 வருடங்களாக அகதிகளாக முகாங்ளில் வாழ்ந்துவிட்டு தற்போது சொந்த நிலத்திற்கு திரும்பியுள்ள நிலையில் தமது வீடு வாசல்கள் முதலிய சொத்துக்களை எல்லாம் அழித்த பின்னரும் தமது நிலத்தில் இருக்கும் மரங்களை அழித்து இயற்கை வளங்களை சூறையாடியிருப்பதாக அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
திருடர்களே இவ்வாறு கைவரிசையை காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளபோதும் இராணுவம் மற்றும் பொலிஸாரை கடந்து திருடவர்கள் எவ்வாறு மரங்களை இவ்வாறு கொண்டு செல்ல முடியும் என்றும் பிரதேச மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதேவேளை மீள்குடியேறிய மக்கள் தமது தேவைகளுக்காக மரம் தடிகளை கொண்டுவருவதற்கு பல்வேறு விதிகள் உள்ள நிலையில் திருடர்கள் எவ்வாறு தமது மரங்களை அழித்து பிரதேசத்தை விட்டு வெளியில் கொண்டு செல்ல முடியும் என்றும் அப் பகுதி மக்கள் கேட்கின்றனர்.
இதேவேளை வலி வடக்கில் காங்கேசன்துறையை அண்டிய பகுதியில் இருந்து வளமான மண் அகழ்ந்து செல்லப்படுவது குறித்தும் இவ்வாறே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. குறித்த பிரதேசம் மண் அகழ்வினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
இராணுவத்தினர் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் மரங்கள் மற்றும் மண் அகழ்வுக்கு இராணுவத்தினரே பொறுப்பு என்றும் இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் வெளிப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.