முன்னாள் ராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தொடரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசியல் யாப்பின் 157ம் இலக்க ஏ பிரிவின் 3ம் சரத்துக்கு அமைய குறித்த வழக்கு தொடரப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அரசியல் யாப்பின் 157 ஏ ஒன்றின் அடிப்படையில், எந்த ஒரு நபரும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ , இலங்கைக்கு உள்ளேயோ வெளியிலோ, இலங்கையில் தனி நாட்டை உருவாக்குவதற்கு ஆதரவளிக்கவோ, கருத்துரைக்கவோ, பிரசாரம் செய்யவோ, நிதியளிக்கவோ, ஊக்குவிக்கவோ அல்லது ஆலோசனை வழங்கவோ முடியாது.
இதன்கீழ் குற்றமிழைக்கின்றவர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு விசாரணையின் அடிப்படையில் தண்டிக்கப்பட வேண்டும்.
இந்த சட்டத்தின் பிரகாரம் குறிப்பிட்ட காலத்துக்கு 7 வருடங்களுக்கு மேற்படாத வகையில் விஜயகலா மகேஸ்வரனின் குடியுரிமை பறிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றும் அவரின் அசையும் மற்றும் அசையா சொத்துகளை ஸ்தம்பிக்க செய்யவும் இயலும்.எனினும் இதனை மேன்முறையீட்டு நீதிமன்றம் அவசியப்பாட்டின் அடிப்படையில் தீர்மானிக்கும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளுருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் கருத்தை வெளியிட்டிருந்தார்.
இதுதொடர்பில் ஆராய்ந்த சட்ட மா அதிபர், அவருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் 120ம் பிரிவுக்கு அமைய வழக்கு தாக்கல் செய்யுமாறு பொலிஸ் மா அதிபருக்கு பரிந்துரைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும், இதுதொடர்பில் நாடாளுமன்றத்தின் ஊடாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பில் சபாநாயகருக்கு தாம் அறிவுறுத்தி இருப்பதாகவும், விரைவில் அந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.