விடுதலைப் புலிகளின் சீருடையுடன் ஒளிப்படம் எடுத்துக் கொண்ட ஆறு இளைஞர்களை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரியவருகின்றது.
படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றை அடுத்து, சந்தேக நபர் ஒருவரின் வீட்டை பொலிஸார் சுற்றி வளைத்த போது, குறித்த நபர் தப்பிச் சென்றிருந்தார்.
இதனை அடுத்து வீட்டில் இருந்த கணினியை சோதனைக்குட்படுத்திய போது, அதில், விடுதலைப் புலிகளின் சீருடை அணிந்த 21 இளைஞர்களின் ஒளிப்படங்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த 21 சந்தேக நபர்களையும் கைது செய்ய முயற்சித்தபோது, 6 பேர் கைதாகியுள்ள நிலையில் ஏனையோர் அந்தப் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக கூரப்படுகின்றது.
விடுதலைப் புலிகள் இயக்க அடையாள அட்டைகளைத் தயாரிப்பதற்காக இந்த ஒளிப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கலாம் என்றுன பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் குழுவொன்று உருவாகி வருவதாக காண்பித்து, புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து நிதியைப் பெற்றுக் கொள்ளும் முயற்சியில் இந்த குழு செயற்பட்டு வந்ததாக , ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை, கிளிநொச்சி- வட்டக்கச்சியில், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால், பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் , விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்கள் இருவருக்கு புகலிடம் கொடுத்து, மருத்துவ சிகிச்சை அளித்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் ஒரு முன்னாள் போராளி என்றும், அவரும் விடுதலைப் புலிகளை மீள் உருவாக்க உதவியதாகவும் கூறி அண்மையில்பொலிஸாரால் அவரும் கைது செய்யப்பட்டார்.
பொலிஸார் வீட்டைச் சோதனையிடச் செல்வதற்கு முன்னரே, அங்கிருந்த இரண்டு சந்தேக நபர்களும் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
அவர்களில் ஒருவர், காயமடைந்துள்ளதாகவும் அவருக்கு குறித்த பெண் சிகிச்சை அளித்துள்த்தாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.