விடுதலைப் புலிகள் மீதான தடைநீக்கம் ஒரு வரலாற்று திருப்புமுனையாகும்!

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கி ஐரோப்பிய நாடுகள் ஒன்றியத்தின் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அவ்வறிக்கையில்,

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலிலிருந்து விலக்கக் கோரி தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் தான் ஐரோப்பிய உயர்நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட பின்னர் அமெரிக்க வல்லரசு தனது ஆதரவு நாடுகளை ஒருங்கிணைத்து உலகளாவிய அளவில் பயங்கரவாதத்தை ஒழிக்கப் போவதாக உறுதியேற்றது.

அதன் அடிப்படையில், அல்கொய்தா உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட இயக்கங்ககளை பயங்கரவாத இயக்கங்களாக பட்டியலிட்டது. அந்த இயக்கங்களின் வரிசையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் இணைத்தது தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது.

சிங்கள பேரினவாத அரசு, இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் ஆதரவையெல்லாம் திரட்டி, விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் மிகவும் சாதுர்யமாக இணைத்துவிட்டது.

இதனால் சிங்கள அரசு மட்டுமின்றி இந்தியா உள்ளிட்ட அமெரிக்க ஆதரவு நாடுகளும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தடைவிதித்தன.

அதன் விளைவாக புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ்ச் சமூகத்தினர் வெளிப்படையாக தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்து செயல்பட இயலாத நெருக்கடி ஏற்பட்டது.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நிகழ்ச்சிகளை நடத்தவோ, நிதி திரட்டவோ முடியாத நிலை உருவானது.

அத்துடன், விடுதலைப் புலிகளுக்கு எதிராக உலக நாடுகள் ஒருங்கிணைந்து இராணுவரீதியாகவும் செயல்பட தொடங்கின. அதன் உச்சகட்டநிலைதான் முள்ளிவாய்க்கால் பகுதியில் நடத்தப் பட்ட ஈவிரக்கமற்ற இனப்படுகொலையாகும். அப்போது, அப்பாவி பொது மக்களையும் கூட பாதுகாப்பதற்கு உலக நாடுகளோ ஐநா பேரவையோ முன்வரவில்லை என்பது கொடுமையிலும் கொடுமையாகும்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்கான வெகுமக்கள் போராட்டமாகும். ஆகவே தான் தமிழ்மக்கள் யாவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தங்களுக்குரிய பாதுகாப்பியக்கமாக ஏற்று ஆதரவளித்தனர்.

இவ்வாறு, மக்களின் பேராதரவைப் பெற்ற விடுதலைப் புலிகள் இயக்கத்தை அல்கொய்தா போன்ற இயக்கங்களுக்கு இணையாக பட்டியல்படுத்தியது மாபெரும் வரலாற்று பிழையாகும்.

இதனை எதிர்த்து இலண்டன் வாழ் தமிழ் இளைஞர் ஒருவர் வழக்கு தொடுத்தார். அவ்வழக்கை விசாரித்த ஐரோப்பிய நாடுகள் ஒன்றியத்தின் உயர்நீதிமன்றம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்கி தீர்ப்பளித்திருக்கிறது. இது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஒரு மகத்தான திருப்புமுனையாகும்.

எனினும், இத்தீர்ப்பினை முறையாக ஆய்வுக்கு உட்படுத்துவோம் என்றும் அதன் பின்னரே இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக முடிவெடுப்போம் என்றும், அதுவரையில் விடுதலை புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் தொடரும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த அறிவிப்பு மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.

இந்நிலையில், உயர்நீதிமன்றத் தீர்ப்பினை ஏற்று ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை அதிகாரப்பூர்வமாக நீக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

இச்சூழலில், சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையையும் ஆதரவையும் வென்றெடுப்பதே தற்போது நம்முன் உள்ள ஒரு மாபெரும் சவால் என்பதை உணர்ந்து ஒட்டுமொத்த தமிழ்சமூகமும் ஒருங்கிணைந்து செயல்பட உறுதியேற்போம் என்று அறைகூவல் விடுக்கிறோம்.

ஐரோப்பிய நாடுகள்தமிழீழ விடுதலைப் புலிகள்தொல் திருமாவளவன்விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
Comments (0)
Add Comment