மட்டக்களப்பு தரவையில் அமைக்கப்பட்டிருந்த தமிழினத்தின் விடுதலைக்காக போராடிய எமது உறவுகளின் சமாதிகள் அழிக்கப்பட்டு அந்த பகுதிகளில் பெரும்பான்மை இனத்தவர் குடியேற்றப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
வாகரை, இறாலோடை வள்ளுவர் வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், – இந்த பிரதேச மக்களைப் பொறுத்தவரை கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்காது முஸ்லிம் வேட்பாளருக்கு வாக்களித்துள்ளதை நான் வாக்கு எண்ணும் நிலையத்தில் நேரடியாகக் கண்டேன். இந்த சம்பவமானது தமிழ் மக்களை மிகவும் பாதித் திருந்தது. எமது இளைஞர்களின் போராட் டத்தை நேரடியாக பார்த்த இந்த பிரதேச மக்கள் அவர்களின் தியாகங்களை மறந்து அவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் மாற்றுக் கட்சிக்கு வாக்களித்துள்ளீர்கள்.
தமிழர்களுடன் இணைந்து இஸ்லாமிய மாணவர்கள் கல்வி கற்கக்கூடாது என இஸ்லாமியர்களுக்கு தனியானதொரு கல்வி வலயத்தை உருவாக்கி இனவாதத்தை தூண்டிய பிரதியமைச்சர் அமீர் அலிக்கு இந்த பிரதேச மக்கள் வாக்களித்துள்ளீர்கள். தமிழ், முஸ் லிம் மாணவர்கள் ஏன் இணைந்து படிக்க முடியாது?
அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சமுர்த் திக் கொடுப்பனவை நேரில் சென்று வழங்கினார் என்பதற்காக தமிழ் இனத்தின் ஒரேயொரு உரிமையாக இருக்கின்ற வாக்குகளை இஸ்லாமிய மகனுக்கு வழங்கி எமது இனத்தை கொச்சைப்படுத்தியிருக்கிறீர்கள்.
உங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிடிக்கவில்லை என்றால் ஏனைய கட்சிகளில் போட்டியிட்ட தமிழனுக்கு வாக்களித்திருக்கலாம். தமிழ் மக்கள் தமது சொந்த நிலத்தில் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக நாங்கள் இன்றுவரை போராடிக் கொண்டிருக்கிறோம்.
இந்த பிரதேச மக்கள் வாக்களிக்கவில்லை என்பதற்காக நாங்கள் அபிவிருத்தி நடவடிக்கைகளில் புறந்தள்ளமாட்டோம். சகல அபிவிருத்தி நடவடிக்கைகளும் இந்த பிரதேசங்களில் நடைபெறும் அதில் பாரபட்சம் காட்டமாட்டோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் குடும்பிமலை பகுதியில் திட்டமிட்டமுறையில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள். பெரும்பான்மை இனத்தவர் எங்களது பிரதேசத்தை சுவீகரிப்பதற்காக எமது இனத்தின் விடுதலைக்காக, எமது மக்களுக்கு நியாயபூர்வமான சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காக தங்களைத் தியாகம் செய்து போராடி உயிர்நீத்த எமது உறவுகளை அடக்கம் செய்த தரவை மயானத்திலிருந்த கட்டடங்களை இடித்து சிங்கள மக்களுக்கு காணி பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்கப்படுகிறது. இதனை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இறந்த உறவுகளின் கட்டடங்களை கூட பாதுகாக்க முடியாதவர்களாக எங்களை இந்த அரசாங்கம் உருவாக்குகிறது. நல்லாட்சி எனக் கூறும் அரசாங்கம் அதர்மமான செயல்களில் ஈடுபடக்கூடாது. எமது உறவுகள் அடக்கம் செய்யப்பட்ட பகுதிகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
பண்டைய மன்னன் துட்டகைமுனு தன்னுடன் போரிட்டு வீரச்சாவடைந்த தமிழ் மன்னன் எல்லாளனின் வீரத்தை உணர்ந்து அவரை அநுராதபுரத்தில் அடக்கம் செய்த இடத்தை பாதுகாத்து வணக்கம் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளான்.
இந்த அரசாங்கம் தமிழினத்தின் விடுத லைக்காக போராடிய எமது உறவுகளின் சடலங்கள் விதைக்கப்பட்ட இடங்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களின் சமாதிக்க கட்டடங்கள் தொடர்ந்து இருப்பதற்கும் நடவடிக்கையெடுக்க வேண்டும். அதுதான் நல்லாட்சியின் மகத்துவம். சமாதிக் கட்ட டங்களை இடித்து ஆட்சி மாற்றத்துக்கு வாக்களித்த தமிழ் மக்களின் மனங்களை துன்புறுத்தாதீர்கள் என்றார்.