விவசாயக் கிணற்றில் விழுந்து, 37 வயதான தாயும், 6 வயதான சிறுவனும் பலியான துன்பகரமான சம்பவமொன்று, அநுராதபுரம், மரதன்கடவல, கீழ் அம்பதலே பிரதேசத்தில், செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
உறவினரொருவரின் மரணவீட்டுக்குச் சென்று, விவசாய நிலத்தின் ஊடாக, வீடொன்றுக்கு திரும்பிகொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. எனினும், அந்தக் கிணற்றுக்குள் அவர்களுடனேயே தவறிவிழுந்த 9 வயதான மற்றுமொரு சிறுவன் தப்பித்துள்ளான். சம்பவம் தொடர்பில், அந்த சிறுவன், பொலிஸாருக்கு அளித்துள்ள வாக்குமூலத்தில், “மரண வீடுக்கு வந்திருந்த அவ்விருவரையும் இரவு கூட்டிக்கொண்டு, அங்கிருந்த மற்றொரு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தோம்.
காணியின் ஊடாகவே அவ்வீட்டுக்கு திரும்பிகொண்டிருந்தோம், அப்போது படிகட்டுகளில் தடுக்கிட்டு விழுவதை போலவே இருந்தது. எனினும், விபத்தில் சிக்கிகொண்டதை அறிந்த நான் ஒருவாறு நீந்திவந்து, குழாயைப் பிடித்து, அதிலேறி தப்பித்துவிட்டேன். அதன்பின்னரே, சத்தமிட்டேன். ஊர்காரர்கள் ஒன்றுதிரண்டு, அம்மாவையும் தம்பியையும் காப்பாற்றினர். எனினும், அவ்விருவரும் இறந்துவிட்டனர்” என்றார். இறந்தவர்கள் இருவரும், மினுவங்கொடையை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என பொலிஸார் கூறினர்.