வீடுகளை இடிக்க அதிகாரிகள் நடவடிக்கை: சாலைமறியலில் சைதாப்பேட்டை மக்கள்

சென்னை சைதாப்பேட்டை அடையாறு ஆற்றின் பாலம் அருகே பழைய ஜோதிமாநகர் குடிசை பகுதி உள்ளது. இங்கு 200–க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன.

அந்த வீடுகளை இடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, குடிநீர் சப்ளையும் நிறுத்தப்பட்டுவிட்டது. வீடுகளை இடிப்பதற்காக அதிகாரிகள் நேற்று வந்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து அப்பகுதி மக்கள் நேற்று மதியம் சைதாப்பேட்டையில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சாலை ஓரம் அழைத்து சென்றனர். அப்போது பொதுமக்கள் சிலருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அப்பகுதி மக்கள் சைதாப்பேட்டை மாநகராட்சி வார்டு அலுவலகம் அருகே முற்றுகை போராட்டத்தை தொடர்ந்தனர்.

போராட்டம் குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கி தரப்படும் என்று கடந்த 2012–ம் ஆண்டு ‘பயோ–மெட்ரிக்’ முறையில் கணக்கெடுக்கப்பட்டது. ஆனால், இதுவரையில் வீடுகள் ஒதுக்கி தரப்படவில்லை.

எங்களுக்கு வீடுகளை ஒதுக்காமல் இப்பகுதியில் வாடகைக்கு இருந்தவர்களுக்கு வீடுகளை ஒதுக்கி தந்துள்ளனர். இதில் முறைகேடு நடந்துள்ளது. எங்களுக்கு வீடுகள் ஒதுக்கி தராமல் வீடுகளை இடிக்க அனுமதிக்கமாட்டோம்.’ என்றனர். பொதுமக்கள் போராட்டம் காரணமாக நேற்று வீடுகளை இடிக்காமல் அதிகாரிகள் திரும்பி சென்றனர். பதற்றம் நீடிப்பதால் போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

அடையாறுஆறுஇடிப்புகுடிசைசாலைசென்னைசைதாப்பேட்டைஜோதிமாநகர்மக்கள்மறியல்
Comments (0)
Add Comment