வீரதீர செயல் புரிந்த 4 பேருக்கு அண்ணா பதக்கம் – ஜெயலலிதாவால் வழங்கி வைப்பு

தமிழகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ளம் உள்பட பல்வேறு ஆபத்துகளில் இருந்து மக்களைக் காப்பாற்றி வீரதீர செயல் புரிந்த 4 பேருக்கு அண்ணா பதக்கத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.      

வீரதீர செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு அண்ணா பதக்கம், தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா கொண்டாட்ட நிகழ்ச்சியின்போது முதல்-அமைச்சரால் வழங்கப்பட்டு வருகிறது.   இந்த குடியரசு தின விழாவின்போது, சென்னை கே.கே.நகர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் எம்.எஸ்.பாஸ்கர், காஞ்சீபுரம் நங்கநல்லூரைச் சேர்ந்த கோ.சீனிவாசன், நாகப்பட்டினம் மாவட்டம் திருமுல்லைவாசலைச் சேர்ந்த கலியமூர்த்தி என்பவரின் மகன் க.ரிஷி, சென்னை சூளைமேடு சவுராஷ்டிரா நகரைச் சேர்ந்த ச.முகமது யூனுஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

அண்ணா பதக்கம் வழங்கப்பட்டதற்கான காரணத்தை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது;-  கடந்த டிசம்பர் மாதம் சென்னை மற்றும் சுற்றுப்பகுதியில் கடுமையாக மழை பெய்தது. நீலாங்கரை போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியான பாலவாக்கம், வெட்டுவாங்கேணி, கற்பகவிநாயகர் நகர், கஸ்தூரிபாய் நகர், ஈஞ்சம்பாக்கம், மகாத்மாகாந்தி நகர், ஹனுமான் காலனி, வடக்கு பெத்தேல் நகர், தெற்கு பெத்தேல் நகர் மற்றும் கூவம் ஆற்றுப் பகுதியை ஒட்டிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

வெள்ளத்தின் மட்டம் உயர்ந்து அந்தப் பகுதிகள் துண்டிக்கப்பட்டன. உள்ளே சிக்கிக் கொண்ட மக்கள் உயிருக்காக போராடினர். அப்போது அந்தப் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த எம்.எஸ்.பாஸ்கர், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மீனவர்கள் மூலம் மீன்பிடி படகுகள், ரப்பர் மிதவைகள் போன்றவற்றை ஒருங்கிணைத்து மீட்புப் பணிகளை மேற்கொண்டார். அதில் ஆயிரத்து 500 பேர் மீட்கப்பட்டனர்.

2.2.15 அன்று பெத்தேல் நகரில் உள்ள இஸ்லாமிய நூருன் அமின் பாடசாலையில் தங்கியிருந்த 3 பெரியவர்கள், முகமது ஜாகீர் அறக்கட்டளையைச் சேர்ந்த 18 அனாதைச் சிறுவர்கள் ஆகியோர் தண்ணீரில் ஏறக்குறைய மூழ்கிய நிலையில் இருந்தனர். அறக்கட்டளை மேலாளர் சுலைமான் எழுப்பிட கூக்குரலை அடுத்து, எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படகுகள் மூலம் அவர்களை மீட்டனர்.  அருகில் சரவணாநகரில் தத்தளித்துக் கொண்டிருந்த 4 பேர் அவரால் காப்பாற்றப்பட்டனர். தன் உயிரைப் பொருட்படுத்தாமல் பல மக்களை காப்பாற்றியதற்காக இன்ஸ்பெக்டர் எம்.எஸ்.பாஸ்கருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்படுகிறது.

சென்னை மெரினா கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது குணசேகரன் என்பவரை அலை இழுத்துச் சென்றது. இதைப் பார்த்த அவரது தாயார் பிரபாவும் செய்வதறியாமல் கடலுக்குள் இறங்கினார். அப்போது அங்கிருந்த காஞ்சீபுரம் மாவட்டம் நங்கநல்லூரைச் சேர்ந்த கோ.சீனிவாசன், உயிரை துச்சமாக நினைத்து கடலுக்குள் இறங்கி, பிரபாவைத் தடுத்து, குணசேகரனையும் காப்பாற்றினார்.

நாகை மாவட்டம் திருமுல்லைவாசல் கடலில் அமிருதீன், சகாபுதீன், ஷமீர் பாரிஸ் ஆகிய மாணவர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது பெரிய அலை வந்து அவர்களை இழுத்துச் சென்றது. அவர்கள் அனைவரும் உதவி கேட்டு கூக்குரலிட்டனர்.  அங்கு வந்த ரிஷி சிறிய மரத்துண்டு உதவியுடன் சகாபுதீன், ஷமீர் பாரிஸ் ஆகியோரின் உயிரைக் காப்பாற்றினார். தீரத்துடன் கடலுக்குள் இறங்கி மாணவர்களின் உயிரைக் காப்பாற்றியதற்காக ரிஷிக்கு 2016-ம் ஆண்டுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்படுகிறது.

கடந்த 17.11.15 அன்று வெள்ளப் பெருக்கின்போது, சூளைமேடு பகுதியில் ச.முகமது யூனுஸ் உதவியால் ஆயிரத்து 500 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, 300 வீடுகளில் தங்க வைக்கப்பட்டனர். 2.12.15 அன்றும் வெள்ளத்தின்போது 600 பேரை காப்பாற்றினார்.  1.12.15 அன்று கர்ப்பிணியாக இருந்த ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த சித்ராவைக் காப்பாற்றி பெருங்களத்தூர் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. மறுநாளில் சித்ராவும் அவரது கணவர் மோகனும் அந்தக் குழந்தைக்கு யூனிஸ் என்று பெயரிட்டு மகிழ்ந்தனர்.

முகமது யூனிசின் தன்னலமற்ற வீரச் செயலைப் பாராட்டி 2016-ம் ஆண்டுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்படுகிறது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அண்ணாஆபத்துகாப்பாற்றல்சமீபம்ஜெயலலதாதமிழகம்பதக்கம்மக்கள்மழைவீரதீரம்வெள்ளம்
Comments (0)
Add Comment