திருவள்ளூரில் மாவட்ட வணிகர் சங்க பேரவை கூட்டம் மாவட்ட தலைவர் திருவடி தலைமையில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. சங்கத்தின் துணைத் தலைவர் தி.ராசகுமார், மாவட்ட நிர்வாகிகள் துரைப்பாண்டி, சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், வணிகர் சங்கத்தின் மாநில தலைவர் த.வெள்ளையன் கலந்து கொண்டு பேசும்போது: வெளிநாட்டு குளிர்பானங்களின் விற்பனையை வணிகர்கள் உடனே நிறுத்த வேண்டும். அது ஜல்லிக்கட்டுக்கு எதிராக போராடிய மாணவர்களின் விருப்பம். மேலும் உடலுக்கு கெடுதியான வெளிநாட்டு குளிர்பானங்களை விட, உடலுக்கு ஏற்ற நம்நாட்டு தயாரிப்புகளை அதிகளவில் விற்பனை செய்ய வேண்டும் என்றார்.
மேலும், ஆன்லைன் வணிகத்தை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். தடை செய்யும் வரை வணிகர் பேரவை தொடர்ந்து போராடும் என்றார்.
இதில், திருவள்ளூர், திருத்தணி, கடம்பத்தூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வணிகர்கள் கலந்துகொண்டனர்