நிர்ணயிக்கப்பட்ட வேகத்தைவிடவும் அதிகமான வேகத்தில் பயணிக்கும் வாகனங்களுக்கு எதிராக, அறவிடப்படும் தண்டப்பணத்தை, வேகத்துக்கேற்ப அதிகரிப்பதற்கான முறைமையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, வீதி பாதுகாப்பு தொடர்பிலான தேசிய சபையின் தலைவர் வைத்தியர் சிசிர கொத்தாகொட தெரிவித்தார். அதனடிப்படையில், சாதாரண வாகனமொன்று, மணித்தியாலயத்துக்கு பயணிக்கக்கூடிய ஆகக்கூடிய வேகம், ஒருமணித்தியாலத்துக்கு 70 கிலோமீற்றர் ஆகும். ஒருமணித்தியாலத்துக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்தால் அறவிப்படும் தண்டப்பணத்தைவிடவும், கூடுதலான தண்டப்பணம், ஒருமணித்தியாலத்துக்கு 80-90 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கும் வாகனங்களிடமிருந்து அறவிடப்படும். அதேபோல, ஒரு மணித்தியாலத்துக்கு 90-100 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கும், வாகனங்களிடமிருந்து அறவிடப்படும் தண்டப்பணம், அதனைவிடவும் அதிகமாகும். “அன்றாடம் இடம்பெறும், வாகன விபத்துகளினால் உயிரிழப்புகள் அதிகரித்துச் செல்கின்றன. வாகன விபத்துகளை தவிர்க்கும் வகையிலேயே இந்த புதிய திட்டம் கொண்டுவரப்படவுள்ளது. இதேவேளை, அதிவேக நெடுஞ்சாலைகளிலும் ஒரு மணிநேரத்துக்கு 100 கிலோமீற்றருக்கு மேல், வேகத்தில் பயணித்தால், அவ்வாறான வாகன சாரதிகளிடமிருந்து அறவிடப்படும் தண்டப்பணமும், மேற்குறிப்பிட்ட முறைமையின் அதிகரிக்கப்படும் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படும்” என்றார்.