வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஜெ தீர்வு காண வேண்டும் – அன்புமணி

கல்விக்கடனை திரும்ப செலுத்த முடியாத நிலையில் உள்ள வேலை இல்லாத பட்டதாரிகளின் பிரச்சினைக்கு ஜெயலலிதா தீர்வுகாண வேண்டும் என டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.  இதுகுறித்து பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-  கல்விக் கடன் வாங்கி உயர்கல்வி படித்த மாணவர்கள் வேலை கிடைக்காமல் வாடும் நிலையில், அவர்களிடமிருந்து கல்விக் கடனை வசூலிக்க பாரத ஸ்டேட் வங்கி சில வழிமுறையை கையில் எடுத்துள்ளது.  

மாணவர்களுக்கு வழங்கிய கல்விக் கடன்களில் தவணை தவறிய கடன்களை தனியார் நிறுவனத்திடம் அடிமாட்டு விலைக்கு விற்று, முழுத் தொகையையும் மாணவர்களிடமிருந்து வசூலித்துக் கொள்ள அனுமதித்திருக்கிறது. ஸ்டேட் வங்கியின் இந்த செயல் கண்டிக்கத்தக்கதாகும்.  இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கல்விக் கடன் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் ரூ.61,176 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலிருந்து மட்டும் 9.56 லட்சம் மாணவர்கள் ரூ.16,380 கோடியை கடனாக பெற்றிருக்கின்றனர். இவற்றில் ரூ.1,875.56 கோடி மட்டும் வாராக்கடனாக மாறியிருக்கிறது.

இதில் பாரத ஸ்டேட் வங்கி மூலம் வழங்கப்பட்ட தொகை ரூ.847 கோடி ஆகும். இந்த வாரக் கல்விக் கடனை 45 சதவீதம் தொகைக்கு ரிலையன்ஸ் கடன் வசூல் நிறுவனத்திடம் விற்பனை செய்திருக்கிறது.  வாராக்கடன்களை வாங்கிய ரிலையன்ஸ் நிறுவனம் கல்விக் கடனை திரும்ப செலுத்த முடியாத நிலையில் உள்ள மாணவர்களை மிரட்டத் தொடங்கியுள்ளது. கல்விக்கடனை உடனடியாக திரும்பச் செலுத்தாவிட்டால் மிக மோசமான நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிடும் என்று மாணவர்களுக்கு ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் அனுப்பப்பட்ட கடிதங்களில் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.  அடுத்தகட்டமாக குண்டர்களை அனுப்புதல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ரிலையன்ஸ் நிறுவனம் இறங்கலாம் என்பதால் மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் கடுமையான அச்சத்தில் உறைந்திருக்கின்றனர்.

பாரத ஸ்டேட் வங்கியின் முடிவால் வேலையில்லா பட்டதாரிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு தீர்வுகாண வேண்டும். தமிழகத்தில் வாராத கல்விக் கடன் ரூ.1,875 கோடி மட்டும் தான் என்பதால், அதில் 45 சதவீதம் தொகையான ரூ.843 கோடியை தமிழக அரசே செலுத்தி கூட கடனை தள்ளுபடி செய்ய கோரலாம். இப்பிரச்சினையில் தமிழக அரசும், பாரத ஸ்டேட் வங்கியும் இணைந்து வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை போக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால், பாதிக்கப்பட்ட மாணவர்களைத் திரட்டி எனது தலைமையில் மிகப்பெரிய அறப்போராட்டத்தை பா.ம.க. நடத்தும் என்று எச்சரிக்கிறேன்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அன்புமணிகல்விக்கடன்ஜெயலலிதாதீர்வுபட்டதாரிபிரச்சனைராமதாஸ்வேலையில்லா
Comments (0)
Add Comment