இது தொடர்பான கேள்வி- பதில் விவரம் வருமாறு:
கேள்வி 1:- அண்மைக் காலத்தில் மு.க. ஸ்டாலின் நடத்தி வரும் பேரணி களைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? அந்தப் பேரணிகள் ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்? தமிழகத்தின் எதிர் காலத் தலைவராக மு.க. ஸ்டாலின் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறார் என்று நினைக்கிறீர்களா?
பதில் :- கழகப் பொருளாளர் தம்பி மு.க. ஸ்டாலின் நடத்திக் கொண்டிருக்கும் “நமக்கு நாமே” விடியல் மீட்புப் பயணம் தமிழக மக்களின் பேராதரவோடும், பாசம் மிகுந்த வரவேற்போடும், மாற்றாரும் மருளும் வகையில், மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் தொலைபேசி வாயிலாக என்னைத் தொடர்பு கொண்டு ஸ்டாலின் அன்றாடம் நிகழ்ச்சிகள் எவ்வாறு நடந்தன என்பதையெல்லாம் விரிவாகக் கூறி வருகிறார். “தி.மு. கழகத்தின் எதிர்காலம்” என்று நான் ஏற்கனவே கூறியதை அட்சரம் பிசகாமல் மெய்ப்பிக்கும் வகையில் தான் மக்களின் வரவேற்பு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.
கேள்வி 2 :- கட்சித் தலைமைக்கு வாரிசாக ஸ்டாலினை நியமித்து அறிவிப்பதை எது தடுக்கிறது?
பதில் :– கழகம் நியமனக் கட்சியல்ல; மிகப் பெரிய ஜனநாயக இயக்கம்; பெரும்பான்மை விருப்பப்படியே இங்கு எல்லாம் நடக்கும்; என்று பல முறை சொல்லியாகி விட்டது. கழகத்தின் பொதுக் குழுவும், செயற்குழுவும் கூடி மேற்கொள்ள வேண்டிய முடிவினை, நான் ஒருவன் மட்டும் தனித்து எடுத்து அறிவித்து விட முடியாது. நான் அறிவிக்காமலேயே கழகத்தின் தலைமைப் பொறுப்புக்குத் தகுதி மிக்கவராக ஸ்டாலின் விளங்குகிறார் என்பது அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிந்த உண்மை தான்.
கேள்வி 3 :- 2 ஜி அலைக் கற்றை விவகாரம் 2016 பொதுத் தேர்தலில் தி.மு.க. வுக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துமா?
பதில் :- 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கருத்தியலான இழப்பு குறித்து தனி நீதி மன்றம் விசாரித்து வருகிறது. இது 2016 சட்டப் பேரவைப் பொதுத் தேர்தலில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தாது என்று நான் நம்புகிறேன்.
கேள்வி 3:- 2016 பொதுத் தேர்தலில் தமிழகத் தேர்தலின் மிக முக்கியமான பிரச்சினையாக தாங்கள் எதைக் கருதுகிறீர்கள்?
பதில் :- தமிழகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் வெறுத்து ஒதுக்கும் செயல் திறனற்ற அதிமுக ஆட்சி தொடர வேண்டுமா? செயல் திறனை ஏற்கனவே ஐந்து முறை நிரூபித்துக் காட்டியிருக்கும் தி.மு.க. ஆட்சி மீண்டும் மலர்ந்திட வேண்டுமா? என்பது தான் 2016 சட்டப் பேரவைப் பொதுத் தேர்தலில் முக்கியமான பிரச்சினையாகும்.