தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, சென்னையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தினந்தோறும் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 14-ந்தேதி வடபழனியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் தேர்தல் ‘பிளாஷ் மாப்’ எனும் விழிப்புணர்வு நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
இதில் தியாகராயநகர் தேர்தல் அதிகாரியும், பரத நாட்டிய கலைஞருமான கவிதா ராமு தலைமையில் நடந்த நாட்டிய நிகழ்ச்சி பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து மீண்டும் ஒரு விழிப்புணர்வு நாட்டிய நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் விழிப்புணர்வு நாட்டிய நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனருமான டாக்டர் பி.சந்திரமோகன், கூடுதல் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆஷியா மரியம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியிலும் ‘போடுவோம் ஓட்டு… வாங்க மாட்டோம் நோட்டு..’ என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தேர்தல் அதிகாரி கவிதா ராமு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் உற்சாகமாக நடனமாடி கடற்கரைக்கு நடைப்பயிற்சி மேற்கொள்ள வந்திருந்த அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரமோகன் கூறியதாவது:- சென்னையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அரசியல் கட்சியினர் மீது 181 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. தேர்தலையொட்டி வேட்பாளர் செலவுக் கணக்கு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி மத்திய அரசு செலவீன பார்வையாளர்கள் வரவுள்ளனர். தேர்தல் ஆயத்தப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.