யாழ்ப்பாணம் மாநகர மத்திய பேருந்து நிலையத்தைச் சூழ வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வியாபாரிகள் தமக்கு மாற்று இடம் வழங்கவேண்டும் என வலியுறுத்தி அமைதிவழிப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த போராட்டம் யாழ் மாநகர சபை முன்றலில் அவர்கள் இன்று காலை ஆரம்பித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மாநகர மத்திய பேருந்து நிலையத்தை நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நவீன முறையில் மேம்படுத்தப்படவுள்ளது.
அதன் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் பேருந்து நிலையத்தைச் சூழ பழக்கடைகள் உள்ளிட்ட வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் 63 வியாபாரிகளை வரும் 30ஆம் திகதியுடன் அந்தப் பகுதியிலிருந்து வெளியேறுமாறு யாழ் மாநகர சபை அறிவித்திருந்தது.
இந்த நிலையில் 63 வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கவனத்தில் எடுத்து மாற்று இடத்தை ஒதுக்கித் தருமாறு கோரி வியாபாரிகள் அமைதிவழிப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை தமது கோரிக்கையை யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் நிறைவேற்றும் வரை தமது போராட்டம் தொடரும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.