அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்படவுள்ளதாக கூறப்படும் 157 தமிழர்களில் இந்தியர்கள், இருந்தால் அவர்களை ஏற்றுக்கொள்ள தயார் என்று இந்தியா அறிவித்துள்ளது. இந்தியாவின் பாண்டிச்சேரியில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு சென்றதாக கூறப்படும் இந்த 157 பேரையும் ஏற்றுக்கொள்ளத்தயார் என்று இந்தியா ஏற்கனவே அறிவித்திருந்தது.
எனினும் தற்போது இந்தியர்கள் அதில் இருந்தால் என்ற வசனத்தை பயன்படுத்தியுள்ளது. முன்னதாக இந்திய அதிகாரிகள் படகில் இருந்து இறக்கப்பட்ட அகதிகளை விசாரணை செய்ய முற்பட்டவேளையில் அகதிகள் அதற்கு இடம்தரவில்லை. இதனையடுத்தே இந்திய அரசாங்கம் தமது நாட்டவர் குறித்து மாத்திரம் கருத்தை வெளியிட்டுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் அக்பருதீன் இதனை நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்தியர்களை தவிர்ந்த ஏனையவர்கள் தொடர்பில் அகதிகள் சாசனத்தில் கையொப்பமிட்ட நாடு என்ற வகையில் இந்திய சட்டங்களுக்கு உட்பட்ட விதத்தில் இருப்பார்களானால் அவர்களையும் ஏற்றுக்கொள்ளத்தயார் என்று அக்பருதீன் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் அதிகாரியின் உளவு நடவடிக்கை குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்- இந்தியா
இந்தியாவில் உள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்த இலங்கையில் உள்ள பாகிஸ்தானிய அதிகாரி ஒருவர் உடந்தையாக இருந்த சம்பவம் தொடர்பில் இந்திய உரிய பொறிமுறையை கடைப்பிடிக்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் அக்பருதீன் இதனை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் குற்றச்சாட்டை அடுத்து இலங்கையில் செயற்பட்டு வந்த பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரக அதிகாரி சுபைர் சித்தீக் பாகிஸ்தானுக்கு திருப்பியழைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் இந்தியாவின் பாதுகாப்புடன் தொடர்புடைய விடயம் என்பதால் இந்தியா உரிய மார்க்கத்தில் விடயத்தை கையாளும் என்று அக்பருதீன் குறிப்பிட்டுள்ளார்.
கடன் அட்டை முறைகேடு! மூன்று வெளிநாட்டவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
கடன் அட்டை முறைக்கேடு தொடர்பில் மூன்று வெளிநாட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இரண்டு துருக்கியர்கள் மற்றும் ஒரு உக்ரைன் நாட்டை சேர்ந்த பெண் ஆகியோருக்கு எதிராகவே நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்களை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இவர்கள் மூவரும் கடந்த மாதம் கொழும்பு 7 இல் உள்ள தன்னியக்க கருவியில் முறைகேடான கடன் அட்டைகளை பயன்படுத்திப பணம் பெற்ற போது கைது செய்யப்பட்டனர். இதன்போது அவர்களில் சுமார் 12.4 மில்லியன் ரூபாய்கள் இருந்து மீட்கப்பட்டன.