2 ஜி அலைக்கற்றை விவகாரம் மட்டுமின்றி மத்திய தொலை தொடர்பு துறையின் முடிவுகள் அனைத்தும் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு தெரிந்தே எடுக்கப்பட்டன என்று சிபிஐ நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா சாட்சியம் அளித்தார். 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராசா, அந்த வழக்கில் தனது தரப்பு சாட்சியாக அவரே ஆஜராகி சாட்சியம் அளித்து வருகிறார். இதையொட்டி அவர் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிபதி ஷைனி முன்பு ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
கடந்த 2007 முதல் 2011ம் ஆண்டு வரை நான் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்தேன். அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் தொடர்பான அனைத்து முடிவுகளையும் நான் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு சென்ற பிறகே எடுத்தேன். அந்த வகையில் தொலைத் தொடர்பு துறையின் அனைத்து முடிவுகளையும் பிரதமர் அறிவார். அவர் அறியாமல் நான் தன்னிச்சையாக முடிவு எடுத்ததாக கூறப்படுவது தவறு.
2 ஜி அலைக்கற்றையை ஏலமின்றி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு ஆய்வு நடத்துவதற்கு ஆட்சேபம் தெரிவிக்கவே நான் பிரதமரை நேரில் சந்தித்தேன் என்று சிபிஐ தரப்பு கூறுவதில் உண்மை இல்லை. சிலருடைய தனிப்பட்ட சுயலாபத்துக்காகவும், நோக்கத்துக்காகவும் இந்த விவகாரத்தில் பிரதமர் தவறாக வழிநடத்தப்பட்டார். அதனால் ஏற்பட்ட குழப்பத்தை தவிர்க்கவே நான் உடனடியாக பிரதமரின் கடிதத்துக்கு பதில் கடிதத்தை 2007ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி அனுப்பினேன் என்று ராசா கூறினார்.
அப்போது சிபிஐ வழக்கறிஞர் பிரதமருக்கு ஒரே நாளில் இரண்டு கடிதங்களை எழுதியதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள். அப்படி என்றால் அந்த கடிதங்களின் நகல்கள் மத்திய தொலை தொடர்பு துறையின் அனுப்பப்பட்ட கடிதங்கள் பட்டியலில் பதிவு செய்யப்பட்டனவா என்றார். அதற்கு ராசா, நான் பிரதமருக்கு எழுதும் அனைத்து கடிதங்களையும் துறையில் பதிவு செய்து வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. என்னை பொருத்த வரை பிரதமரிடம் தெரிவிக்க நினைத்ததை அவரிடம் கடிதம் மூலமும் நேரிலும் தெளிவுபடுத்தினேன். அதே சமயம் நான் பிரதமருக்கு அனுப்பி கடிதங்கள் தொலை தொடர்பு துறையில் பதிவு செய்யப்பட்டதா என்பதை என்னால் நினைவுகூர்ந்து பார்க்க முடியவில்லை என்றார்.