20 தமிழர்கள் சுட்டுப்படுகொலை விவகாரம்: சிபிஐ விசாரணைக்கோரி உண்ணாநிலை அறப்போர் – திருமாவளவன் அறிவிப்பு

ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுப்படுகொலை செய்த வழக்கில் சிபிஐ விசாரணைகோரி சென்னையில் நாளை உண்ணாநிலை அறப்போர் இருக்கப்போவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

செம்மரக் கடத்தலில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த அப்பாவி கூலித் தமிழர்கள் 20 பேரை ஆந்திர மாநில அரசு துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தது.  செம்மரக் கடத்தலில் ஈடுபடும் மாஃபியா கும்பலின் மீது கை வைக்கத் துணிவில்லாத ஆந்திர மாநில அரசு மிகக் கேவலமான முறையில் அப்பாவித் தமிழர்களைக் கைது செய்து, சிங்கள இனவெறியர்களைப் போல, ஈவிரக்கமற்ற முறையில் வதை செய்து, அந்தக் கொடூரமான படுகொலையை அரங்கேற்றியது.

தமிழகத்தையே அதிர்ச்சியில் உறையவைத்த இக்கொடூரத்தைக் கண்டித்துப் பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் கண்டனப் போராட்டங்களை நடத்தின. அதன் விளைவாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தமிழக அரசு இழப்பீடும் வேலைவாய்ப்பும் வழங்கியுள்ளது. ஆனால், ஆந்திர மாநில அரசின் இக்கொடூரத்தைக் கண்டிக்கவோ, இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டுமென வற்புறுத்தவோ தமிழக அரசு முனைப்புக் காட்டாதது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.  ஆனால் தற்போதைய நிலையில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறிவிட்டது. மனித உரிமை அமைப்புகள் இது தொடர்பாக ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளன.  படுகொலை செய்த ஆந்திர அரசே இந்த வழக்கை விசாரிப்பதில் எந்த ஞாயமும் இல்லை. எனவே, அந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமெனத் தொடர்ந்து வற்புறுத்த வேண்டியது ஒட்டுமொத்தத் தலைவர்களின் கடமையாகும்.

இச்சூழலில் சிபிஐ விசாரணைகோரியும் போதிய இழப்பீடுகோரியும், தமிழக அரசு இதில் தலையிட வேண்டுமென வலியுறுத்தியும் வரும் ஆகஸ்ட் 26 அன்று சென்னையிலும், நவம்பர் 8 அன்று திருவண்ணாமலை மாவட்டம் போளூரிலும் உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெறுகிறது. இப்போராட்டத்தில் மதிமுக, விசிக, இடதுசாரிகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் பங்கேற்கின்றன.  தமிழ்த் தேசிய உணர்வாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும், பொதுமக்களும் பெருந்திரளாக இப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். இவ்வாறு தொல்.திருமாவளவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அறப்போர்உண்ணாநிலைசிபிஐ விசாரணைசுட்டுப்படுகொலைசெம்மரக் கடத்தல்தமிழர்கள்தொல் திருமாவளவன்விடுதலை சிறுத்தைகள்
Comments (0)
Add Comment