சட்டவிரோதமாக பாகிஸ்தான் கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்றதாக கூறி 61 இந்திய மீனவர்களையும் அவர்களின் 11 படகுகளையும் பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்தனர். நேற்று கைது செய்யப்பட்ட மீனவர்கள் கராச்சியில் உள்ள டாக் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர் என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களும் வெளியுறவு சட்டத்தின் கீழும் மீன்படி சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
குஜராத் மற்றும் பாகிஸ்தானில் சிந்து மாகாணத்திற்கும் இடையேயுள்ள குறிக்கப்படாத கடல் எல்லைப்பகுதிக்குள் தவறுதலாக நுழைந்து விடும் மீனவர்களை இரு நாடுகளும் அடிக்கடி செய்கின்றன. இவ்வாறு கைது செய்யப்படும் மீனவர்கள் சிறையில் ஆண்டுகணக்கில் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
கடந்த மே மாதம் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப் இந்தியா வந்த போது, 150 இந்திய மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் பாகிஸ்தான் விடுதலை செய்தது. இருப்பினும் இன்னும் பல இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் சிறையில் வாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.