வட மாகாண ஆளுநர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் வவுனியாவில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற பௌத்த மாநாட்டுக்கு 9 லட்சத்து 16 ஆயிரம்ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண பௌத்த மாநாடு வவுனியா ஸ்ரீபோதி தட்சிணாராம விகாரையில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், கைத்தொழில் வர்த்தக பிரதி அமைச்சர் புத்திக பத்திரன, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், வடகிழக்கு பிரதம சங்கைக்குரிய நாயக்கர் வவுனியா மாவட்ட தலைவர் பூஜ்ஜிய சியம்பலா கஸ்வௌ விமலசார தேரர், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பௌத்த மதகுருமார்கள் மற்றும் ஏனைய மத தலைவர்கள், முப்படையினர் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்த பௌத்த மாநாட்டுக்கு தேநீர் மற்றும் உணவுக்காக 2 லட்சத்து 47 ஆயிரத்து 500 ரூபாவும், கொடி கட்டுதல் மற்றும் நூல் கொள்வனவுக்கு 59 ஆயிரத்து 100 ரூபாவும், பதாதை அலங்காரத்துக்கு 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாவும், விகாரை நுழைவாயில் அலங்காரப் பந்தல் உள்ளிட்ட ஏனைய செலவுகளுக்காக ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாவுமாக மொத்தம் 9 லட்சத்து 16 ஆயிரம் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.