காஷ்மீரில் இரு மாதங்களுக்கு மேலாக அசாதாரண சூழல் நீடித்து வரும் நிலையில், அம்மாநிலத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு கடந்த வாரம் சென்றது. இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு தில்லி திரும்பிய இக்குழுவினர், புதன்கிழமை காலையில் கூடி காஷ்மீர் பயணம் தொடர்பாக விவாதித்தனர். இதில் நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் டாக்டர் பி. வேணுகோபால், மாநிலங்களவை உறுப்பினர்கள் திருச்சி சிவா (திமுக), டி.ராஜா (சிபிஐ) ஆகியோர் பங்கேற்று கருத்துகளை முன்வைத்தனர். அதன் விவரம் வருமாறு:
பி.வேணுகோபால்:
ஸ்ரீநகரில் 200 பேரையும், ஜம்முவில் 17 அமைப்புகளையும் சந்தித்துப் பேசினோம். காஷ்மீர் கலவரத்தில் இளைய தலைமுறையினர்தான் பெருமளவில் ஈடுபடுகின்றனர். அவர்கள் தரமான கல்வி, வேலைவாய்ப்பு பெறும் சூழலை உருவாக்க வேண்டும். ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்க “பெல்லட்’ ரக குண்டுகளுக்குப் பதிலாக மாற்று வழிமுறைகளைக் கையாள வேண்டும். அனைத்துக் கட்சிக் குழுவைச் சந்திக்க மறுத்த பிரிவினைவாதத் தலைவர்களிடம் மீண்டும் பேச்சு நடத்தும் வாய்ப்பை ஆராய வேண்டும். பிரிவினைவாதிகளின் கைகளில் இளைஞர்கள் சிக்கியிருக்கிறார்கள் என்பதற்காக அவர்களைத் தனிமைப்படுத்தவோ, அவர்களின் கோரிக்கையை நிராகரிக்கவோ கூடாது. அமைதியான முறையில் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.
திருச்சி சிவா:
ஜம்மு-காஷ்மீருக்கு இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370-இன் கீழ் வழங்கப்பட்டு வரும் சிறப்புச் சலுகைகள் திரும்பப் பெறப்படாது என்ற நம்பிக்கையை அம்மாநில மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். வரலாறு, பொருளாதாரம், பூகோளம் ரீதியாக பிரச்னைகளை எதிர்கொண்டுள்ள ஜம்மு – காஷ்மீர் மாநில விவகாரத்திற்கு தாற்காலிகமாக அல்லாமல் நிரந்தரத் தீர்வு காண வேண்டும். காஷ்மீரில் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் இளைஞர்கள் ஈடுபடவில்லை. அவர்களுக்கு வேலைவாய்ப்பு, தரமான கல்வி, விளையாட்டுத் துறையில் பயிற்சி போன்றவற்றை வழங்க வேண்டும். கலவரம் ஓய்ந்த பகுதிகளில் சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டி.ராஜா:
காஷ்மீரில் போராட்டத்தை ஒடுக்க “பெல்லட்’ ரக குண்டுகளை பயன்படுத்தக் கூடாது. சிறப்பு அதிகாரச் சட்டத்தை மறுஆய்வுக்கு உள்படுத்த வேண்டும். அனைத்துத் தரப்பினரின் நம்பிக்கையைப் பெறும் வகையில், பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளிடமும் இந்த விவகாரம் குறித்து மத்தி அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.