கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்களை சந்தித்தார் சசிகலா! பத்திரிகையாளர்களுக்கு அனுமதியில்லை

தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை சசிகலா அளித்திருந்தாலும், உடனடியாக அவரை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுக்கவில்லை. சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள ஓ.பன்னீர்செல்வம் பக்கம் 5 எம்.எல்.ஏ.க்கள், 3 எம்.பி.க்கள் வந்த நிலையில், இன்று முக்கிய அமைச்சரான மாபா பாண்டியராஜனும் வந்து சேர்ந்துள்ளார்.

இது ஒருபுறமிருக்க, ஆளுநர் இனியும் காலம் தாழ்த்தாமல் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கக்கோரி சசிகலா கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் இன்று சந்திக்க அனுமதி கேட்டுள்ளார் சசிகலா.

அதன்பின்னர் போயஸ் கார்டனில் திரண்டிருந்த தொண்டர்களிடையே பேசிய சசிகலா, ஓரளவுக்குத் தான் பொறுமையைக் கையாள முடியும் என்றும் அதற்குமேல் நாம் ஒன்று சேர்ந்து செய்ய வேண்டியதைச் செய்வோம் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து, கூவத்தூர் சென்று நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அவருடன், செங்கோட்டையன், தம்பிதுரை, எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்களும் ஆலோசனை நடத்தினர்.

சசிகலா சென்னையில் இருந்து கிளம்பியதில் இருந்தே கூவத்தூர் பகுதி பரபரப்பானது. அங்கு ஏராளமான செய்தியாளர்கள் திரண்டு நட்சத்திர விடுதி நோக்கி சென்றனர். அதேசமயம், சசிகலா வருவதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.

சசிகலா கூவத்தூருக்குள் நுழைந்தபோது, நட்சத்திர விடுதிக்கு செல்ல விடாமல் நிருபர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் போலீசாருக்கும் அவர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் நிருபர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேசமயம் அப்பகுதி பொதுமக்களும் தங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாக குற்றம் சாட்டினர்.

அதிமுகஎம்.எல்.ஏ.க்கள்கூவத்தூர்சசிகலாமுதல்வர்
Comments (0)
Add Comment