சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா பிரேரணை! மு.க.ஸ்டாலின்

தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10.30 மணியளவில் தலைமை செயலகம் சென்றார்.

அவருடன் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரை முருகன், எம்.எல்.ஏ.க்கள் சேகர்பாபு, ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், வி.ஜி.ராஜேந்திரன் ப.ரங்க நாதன் ஆகியோரும் சென்றனர்.

காவிரி பிரச்சனை தொடர்பாக நேற்று முன்தினம் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை முதல்-அமைச்சரின் பொறுப்புகளை வகிக்கும் நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடம் கொடுக்க முடிவு செய்து இருந்தனர்.

ஆனால் ஓ.பன்னீர் செல்வம் தலைமை செயலகத்துக்கு வராததால் மு.க.ஸ்டாலின் அவரை சந்திக்க முடியவில்லை.

இதை தொடர்ந்து அனைத்து கட்சி கூட்ட தீர்மான நகலை எம்.எல்.ஏ.க் கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் கொண்டு சென்று ஓ.பன்னீர்செல்வம் அலுவலகத்தில் அவரது உதவியாளரிடம் கொடுத்தனர்.

இதே போல சட்டசபை செயலாளர் ஜமாலுதீனையும் சந்தித்து மு.க.ஸ்டாலின் கொடுத்து அனுப்பிய கடிதத்தை கொடுத்தனர்.

அதில் சட்டசபையில் அமைக்க வேண்டிய 12 குழுக்களை அமைக்க வேண்டி வலியுறுத்தப்பட்டு இருந்தது.

பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

அரசியல் சாசனத்தில் அங்கீகாரம் பெறும் வகையில் சட்டசபையில் பல குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது சட்டம். உதாரணமாக மதிப்பீட்டு குழு, பொது கணக்கு குழு, பொது நிறுவனங்கள் குழு, அலுவல் ஆய்வு குழு, பேரவை உறுதி குழு, சட்ட விதிகள் ஆய்வு குழு, அரசு உறுதி மொழி குழு, பேரவை குழு மனுக்கள் குழு, பேரவை நூலக குழு, பேரவை முன்பு வைக்கப்படுகிற ஏடுகள் குழு ஆகிய 12 குழுக்கள் ஒவ்வொரு ஆண்டும் அமைக்கப்பட வேண்டும்.

இந்த ஆட்சி பதவியேற்று 5 மாதங்கள் முடிகிறது. ஆனால் இதுவரை இந்த குழுக்களை அமைக்க எந்த அறிகுறியும் தென்படவில்லை. நடைபெற்று முடிந்த சட்டசபை கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவரான நானும், துணைத் தலைவரான துரை முருகனும் அவையில் இந்த பிரச்சனை குறித்து விளக்கம் கேட்டோம். அப்போது பதில் அளித்த சபாநாயகர் இந்த குழுக்கள் அனைத்தும் அமைக்கப்படும் என்று உறுதி மொழி அளித்தார். அவர் தந்த உறுதி மொழி அவை குறிப்பிலேயே இடம் பெற்றுள்ளது.

ஆனால் இதுவரை அமைக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. எனவே இதுபற்றி நாங்கள், சபாநாயகருக்கு மீண்டும் நினைவுபடுத்தும் வகையில் ஒரு கடிதத்தை கொடுத்துள்ளோம். அவர் அறையில் இல்லாததால் பேரவை செயலாளரிடம் கடிதத்தை வழங்கி உள்ளோம்.

எனவே சட்டமன்ற குழுக்களை விரைவில் அமைக்க வேண்டும். அப்படி அமைக்காவிட்டால் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வருவோம். அதற்கான சூழ்நிலையை சபாநாயகர் கொண்டு வர வேண்டாம்.

கவர்னரையும் சந்தித்து இதுபற்றி எடுத்து சொல்ல உள்ளோம். விரைவில் கவர்னரை சந்தித்து மனு கொடுப்போம்.

கேள்வி:- காவிரி பிரச்சனையில் அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மான நகலை நிதி அமைச்சரிடம் நீங்கள் கொடுக்கப்போவதாக தகவல் வந்ததே?

பதில்:- அந்த நகலை முதல்-அமைச்சரின் பொறுப்பை ஏற்றுள்ள நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடம் நாங்கள் கொடுத்துள்ளோம். அவர் அலுவலகத்தில் இல்லாததால் உதவியாளரிடம் நகலை ஒப்படைத்து இருக்கிறோம். தலைமை செயலாளரிடமும் இந்த நகல் கொடுக்கப்பட் டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கவர்னர்சபாநாயகர்சேகர்பாபுஜெ. அன்பழகன்நிதி அமைச்சர்பன்னீர் செல்வம்மா.சுப்பிரமணியன்மு.க.ஸ்டாலின்
Comments (0)
Add Comment