சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சமஸ்கிருதத்தை மூன்றாவது மொழியாக கற்பிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம், மேற்குவங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கண்டனம் தெரிவிக்கப்பட்டதை குறிப்பிட்டுள்ளார். சமஸ்கிருத மொழியை திணிப்பதையே நோக்கமாக கொண்டு மத்திய அரசு ஆணை பிறப்பித்து வருவது கடும் கண்டனத்திற்கு உரியது என வைகோ தெரிவித்துள்ளார்.
பல்வேறு மொழிகள், பன்முக பண்பாடுகள் கொண்ட இந்தியாவில், அனைத்து தேசிய இனங்களுக்கும் சம உரிமையும், வாய்ப்பும் அளித்தால்தான் ஒருமைப்பாடு நிலைக்கும் என்பதை மோடி அரசு உணர வேண்டும் என தெரிவித்துள்ளார். சி.பி.எஸ்.இ. மற்றும் ஐ.சி.எஸ்.இ. பள்ளிகளில் மூன்றாவது மொழியாக சமஸ்கிருதத்தை திணிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அடுத்து திமுக ஆட்சிக்கு வந்தால் அது அதிமுக ஆட்சியை விட மோசமாக இருக்கும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.
கரூரில் மக்கள் நலக் கூட்டணியின் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் நரகத்துக்கு போகும் என்றும், திமுக ஆட்சிக்கு வந்தால் மாநிலம் படு நரகத்துக்கு போகும் என்றும் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக- காங்கிரஸ் கூட்டணியானது, ஊழல் கூட்டணி என்றும் அவர் விமர்சித்தார்.மேலும் லோக் ஆயுக்தாவை கொண்டு வருவதாக மு.க. ஸ்டாலின் பேசியுள்ளதை சுட்டிக் காட்டிய வைகோ, தமிழகத்தில் 5 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தபோது, ஏன் லோக் ஆயுக்தாவை கொண்டு வரவில்லை? எனவும் கேள்வி எழுப்பினார்.