இதற்காக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் சினிமா பிரபலம் – இசையமைப்பாளர் கங்கை அமரன், தானே அங்கு களமிறங்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.
இதையடுத்து, கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பெயரோடு, கங்கை அமரன் பெயரும் இணைக்கப்பட்டு, கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் பா.ஜ., வேட்பாளராக கங்கை அமரன் களமிறங்குவார் என பா.ஜ., தேர்தல் குழு செயலாளர் ஜே.பி.நட்டா டில்லியில் அறிவித்துள்ளார்.இதனையடுத்து தேர்தல் பிரசாரத்தில், கங்கை அமரனின் பங்கு பிராதானமாக இருக்கும் என்கிறது, தமிழக பா.ஜ., வட்டாரம்.
இது குறித்து, அக்கட்சி வட்டாரம் மேலும் கூறியதாவது:
கடந்த 1991-96 ஜெயலலிதா முதல்வராக இருந்த கால கட்டத்தில், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள், தமிழகம் முழுவதும், பலரையும் மிரட்டி சொத்துக்களை வாங்கியதாக புகார் எழுந்தது. அப்படி மிரட்டப்பட்டவர்களில், கங்கை அமரனும் ஒருவர்.
சென்னைக்கு அருகில் உள்ள பையனூரில், கங்கை அமரனுக்குச் சொந்தமான பங்களாவும் பெரும் தோட்டம் ஒன்றும் உண்டு. அந்த தோட்டத்தை சசிகலா தரப்பினர் மிரட்டி வாங்கிக் கொண்டதாக, அப்போதே, புகார் கிளப்பினார் கங்கை அமரன்.
பின், அந்த சொத்து தொடர்பாகவும், சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கல் ஏற்பட்டது. அளவுக்கு அதிகமாக குவிக்கப்பட்ட சொத்துக்களில், பையனூர் பங்களாவும் ஒன்று என்பதால், அது தொடர்பாகவும் விசாரணை நடந்தது.
சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், கங்கை அமரனையும் விசாரித்தனர். பின், கோர்ட்டிலும், கங்கை அமரன் தனது சாட்சியத்தை அளித்தார்.
இப்படி தன்னுடைய சொத்துக்களை மிரட்டி வாங்கியது குறித்து, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம், கங்கை அமரன் பொங்கித் தீர்த்து வந்தார். சட்டசபை தேர்தலுக்கு முன், அவர் தமிழக பா.ஜ.,வில் இணைந்த பின், சசிகலா தரப்பினரின் மிரட்டல்; அரட்டல்; உருட்டல்கள் குறித்தெல்லாம் ஓபனாக பேசி வந்தவர், தன்னை எப்படியெல்லாம் மிரட்டி சொத்துக்களை வாங்கினர் என்பது குறித்தும் சொல்லி வந்தார்.
தற்போது, சசிகலாவின் உறவினர் தினகரன், அ.தி.மு.க.,வின் துணைப் பொதுச் செயலர் ஆனதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். தற்போது, அவரே, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அ.தி.மு.க.,வின் வேட்பாளர் என்றதும், அவரை தோற்கடிக்க வேண்டும் என்ற வெறி அவருக்குள் ஏற்பட்டு விட்டது.
அதற்காக, தானே, பா.ஜ., சார்பில் தினகரனை எதிர்த்து போட்டியிடுகிறேன் என்று, தலைமையை கேட்டிருக்கிறார். அவருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் சரி; கிடைக்கா விட்டாலும் சரி… ஆர்.கே.நகர் தொகுதியில், தினகரனுக்கு எதிராக அவரது பிரசார முழக்கம் இருக்கும். இவ்வாறு பா.ஜ., வட்டாரம் கூறியது.