தெற்கில் உள்ள அரசியல் சக்திகளுக்கே போர் தேவை! சி.வி.கே.சிவஞானம்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒருபோதும், மீண்டும் தலைதூக்காது. தமிழ் மக்கள், ஒருபோதும் மீண்டுமொரு போர்ச்சூழலுக்குள் தள்ளப்பட மாட்டார்கள். தெற்கைச் சேர்ந்த சில அரசியல் சக்திகளுக்கே, போரின் தேவை அவசியமாகியுள்ளது’ என்று வட மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட தற்கொலை அங்கிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் அவைத்தலைவரிடம் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் தனித்தீர்மானத்துக்கு அமையவே போர் முன்னெடுக்கப்பட்டது. அவர் மரணித்ததை அடுத்து, அவ்வியக்கத்துக்கு உயிர்கொடுக்க எவரும் இல்லை’ என்றார்.

உலக நாடுகள் பலவற்றில், புலி இயக்கத்தின் உறுப்பினர்கள் தங்கியிருக்கின்றனர். இருப்பினும், பிரபாகரன் இல்லாத சூழலுக்குள் ஆயுதப் போராட்டமொன்றை நடத்துவதற்கு எவரும் இல்லை. அதனை வேறு யாராலும் செய்யவும் முடியாது. பிரபாகரனின் தனித்தீர்மானத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது.

தமிழ் மக்கள், மீண்டும் இவ்வாறானதோர் ஆயுதப் போராட்டத்துக்கோ அல்லது போருக்கோ போகப்போவதில்லை. அவற்றின் மீது அவர்களுக்கு நம்பிக்கையும் இல்லை’ என்றும் அவர் கூறினார்.

இருப்பினும், தெற்கைச் சேர்ந்த சிலஅரசியல் சக்திகள், அரசியல் இலாபங்களைப் பெற்றுக்கொள்வதற்காக, வாய்க்கு வந்தவையெல்லாவற்றையும் பேசித் திரிந்து கொண்டிருக்கின்றனர். நாட்டில், மீண்டுமொரு போர் உருவாகப்போகிறது என்று அவர்கள் கூறும் கருத்துக்கள், அவர்களுக்கே அந்த போர் அவசியம் காணப்படுகிறது என்பதையே எடுத்துக்காட்டுகிறது. தவிர, தமிழ் மக்களுக்கு மீண்டுமொரு போர் தேவையில்லை.

போர் முடிவடைந்து ஏழு வருடங்களுக்குப் பின்னர், யாழ்ப்பாணத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் தற்கொலை அங்கிகள் என்பன, சுமார் பத்து வருடங்கள் பழமையானவையாகவே இருக்கலாம் என்று நான் நம்புகின்றேன். இவ்விடயத்தை வைத்துக்கொண்டு, அரசியல் இலாபம்பெற எண்ணும் சூத்திரதாரிகளின் கருத்துக்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது’ என்றும் அவர் தெரிவித்தார்.

சி.வி.கே.சிவஞானம்தமிழீழ விடுதலைப் புலிகள்
Comments (0)
Add Comment