நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் முடிக்க உத்தரவு!

சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் பொன்.கலையரசன், தமிழகம் முழுவதுமுள்ள மாவட்ட முதன்மை நீதிபதி, தலைமை மாஜிஸ்திரேட்டு உள்ளிட்ட நீதிபதிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தமிழகம் முழுவதுமுள்ள கீழமை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள், 5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள பழைய வழக்குகள் ஆகியவற்றின் எண்ணிக்கைகள் சேகரிக்கப்பட்டன. இதனடிப்படையில், கீழமை நீதிமன்றங்கள் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை வழக்கமான பணிகளுடன், 5 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்கி அவற்றை விசாரிக்கவேண்டும்.

அதேபோல, ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று வழக்கமான பணிகளுடன், 5 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளை விசாரிக்கவேண்டும்.

அதேபோல, நீண்டகாலமாக முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) நிலையிலேயே நிலுவையில் உள்ள பழைய வழக்குகளில் குற்றப்பத்திரிகையை விரைவாக தாக்கல் செய்யவும், குற்றவாளிகளுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு உத்தரவுகளை விரைவாக அமல்படுத்துவதற்கும் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டங்களை நடத்தவேண்டும். இதுதொடர்பாக ஐகோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த சுற்றறிக்கையை தீவிரமாக அமல்படுத்தவேண்டும்.

திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் பழைய வழக்குகள், அவற்றில் எத்தனை வழக்குகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது? என்பது உள்ளிட்ட அனைத்து புள்ளி விவரங்களையும் மாவட்ட முதன்மை நீதிபதி, தலைமை மாஜிஸ்திரேட்டு ஆகியோர் வாரந்தோறும் அறிக்கையை ஐகோர்ட்டுக்கு அனுப்பி வைக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றம்காவல்துறைசுற்றறிக்கைசென்னைநீதிபதி
Comments (0)
Add Comment