பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, ஆகஸ்ட் 14ம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்ததும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. புதிதாக 12 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களவை தேர்தலில் பாஜ அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்துள்ளது. தற்போது மோடி அமைச்சரவையில் 44 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் 22 பேர் கேபினட் அமைச்சர்கள். மற்றவர்கள் இணை அமைச்சர்கள்.
நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ராணுவத் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கிறார். இதே போல், முக்கிய துறைகளுக்கு தனி கேபினட் அமைச்சர் நியமிக்க வேண்டியுள்ளது. இதனால், மோடி அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடியும் வரை காத்திருக்க பிரதமர் மோடி முடிவு செய்தார். அதன்படி, ஆகஸ்ட் 14ம் தேதி நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிந்தவுடன் அமைச்சரவை விரிவாக்கம் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜ மூத்த தலைவர் யஷ்வந்த் சின்காவின் மகன் ஜயந்த் சின்கா தற்போது ஹசாரிபாக் எம்பியாக உள்ளார். அவருக்கு நிதித்துறை இணை அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளது. வர்த்தகம் மற்றும் நிதித்துறை இணை அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமனிடம் இருந்து, நிதித்துறை இணை பொறுப்பு ஜயந்த் சின்கா வசம் செல்கிறது. நிர்மலா சீதாராமன், வர்த்தக துறை இணை அமைச்சராக தொடர்வார். பாஜவின் தேசிய தலைவர் பதவிக்கு அமித்ஷாவுடன் போட்டியிட்ட ஜே.பி.நட்டாவுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க மோடி முடிவு செய்துள்ளார். மேலும், அமைச்சரவையில் புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டு¢ம் என பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.
எனவே, பிரகாஷ் ஜவடேகர், ரவிசங்கர் பிரசாத், பியூஷ் கோயல் ஆகியோர் வசம் கூடுதலாக இருக்கும் பொறுப்புகளில் சில துறைகள் புது முகங்களுக்கு அளிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. ராஜஸ்தானுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கும் வகையில் புதுமுகங்களான ஆஜ்மீர் எம்பி, சன்வர்லால் ஜாட், ராஜ்யசபா எம்பி புபேந்திர யாதவ் ஆகியோருக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கலாம் என்று பரபரப்பாக பேசப்படுகிறது. உத்தரகண்ட் முன்னாள் முதல்வர்களான ரமேஷ் பொக்கிரியால், பகத்சிங் கோஷியா, பாபா ராம்தேவ் ஆதரவாளரான மேற்கு வங்க பாஜ அசனோல் எம்பி பாபுல் சுப்ரியோ ஆகியோருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்கும் என்றும் பேச்சு அடிபடுகிறது, அதே போல், மகாராஷ்டிராவில் கூட்டணி கட்சிகளான சிவசேனா, அப்னாதள் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பதவி கிடைக்கும். தெலங்கானாவில் செகந்திராபாத் எம்பி பந்தரு தத்தாத்ரேயாவுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.