யாழ். குப்பிழானில் இடி மின்னலால் உயிரிழந்த குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ள தியாகி அறக்கொடை நிறுவனம்…

யாழ்.குப்பிழான் தெற்குப் பகுதியில் நேற்று முன் தினம் இடிமின்னல் தாக்கி உயிரிழந்த ஏழாலை தெற்கு மயிலங்காட்டுப் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தவர்களின் வீடுகளுக்கு தியாகி அறக்கொடை நிறுவனத்தின்(T.C.T)தலைவர் வாமதேவ தியாகேந்திரன் விஜயமொன்றை மேற்கொண்டார்.

உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட அவர் அவர்களின் குடும்ப சூழ்நிலைகளை கேட்டறிந்து கொண்டார்.

இதனையடுத்து தாயை இழந்து தவிக்கும் குடும்பத்தின் பிள்ளையொருவருக்கு T.C.T நிறுவனத்தில் உடனடியாக மாதாந்தம். 30 ஆயிரம் ருபா சம்பளத்தில் வேலை வாய்ப்பு. வழங்குவதாக அவர் உறுதியளித்துள்ளார்.

மேலும் குடும்பத்தலைவர் மற்றும் குடும்பத்தலைவிகளின் உயிரிழப்புக்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் அனைத்துப் பிள்ளைகளினதும் கற்றல்- கற்பித்தல் செலவுகளையும் தியாகி அறக்கொடை நிறுவனம் நூறுவீதம பொறுப்பெடுக்குமென்ற உத்தரவாதத்தையும் அவர் வழங்கியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அரசாங்கத்தால் வழங்கப்படும் வீட்டுத் திட்டம் இதுவரை ஒரு குடும்பத்திற்குக் கிடைக்கவில்லை என்பதை அறிந்துகொண்ட அவர் , எதிர்வரும் இரண்டு மாதத்திற்குள் வீட்டுத் திட்டத்தை அரசு வழங்காவிடில் அதற்கான முழுப் பொறுப்பையும் தமது நிறுவனம் ஏற்றுக் கொள்ளுமெனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சமூகப் பொறுப்புணர்ந்து செயற்படவேண்டிய
தமிழ் அரசியல் வாதிகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிகள் வழங்க முன்வராமை சுட்டிக்காட்டத்தக்கது.

இவ்வாறான நிலையில் சமூகசேவகரும், பிரமுகருமான வாமதேவ தியாகேந்திரன் உடனடியாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ முன்வந்திருப்பது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

உதவிதியாகி அறக்கொடை நிறுவனம்மின்னல்தாக்கி உயிரிழந்தோர்
Comments (0)
Add Comment