வடக்கிலுள்ள மக்கள் சுதந்திரமாக தமது கருத்துக்களை வெளியிட முடியாது, ஊடகவியலாளர்கள் தமது தொழிலை இயல்பாக செய்ய முடியவில்லை, பொதுமக்களுக்கு ஏற்படும் அநீதிகளைத் தட்டிக் கேட்டு ஒரு பேரணிகளை நடாத்த முடியவில்லை. தமிழ் அமைப்புக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என்பன சுயாதீனமாக இயங்க முடியாத மௌனிகளாக செயற்படுகின்றன. ஒரு பொய்யை மறைப்பதற்காக ஒன்பது பொய் சொல்ல வேண்டிவரும் என்ற அடிப்படையில், வடக்கு மக்களை மகிந்த அரசாங்கம் தனது கைக்குள் வைத்திருக்க பல்வேறு பிரேயத்தனங்களை மேற்கொண்டுவருகிறது.
போர் நடந்த காலத்தில் அவசரகாலச் சட்டம், பயங்கரவாதச் சட்டம் என்றெல்லாம் தமிழர்களை வகைதொகையின்றி கைது செய்து, சுட்டுத்தள்ளிக் கொண்டிருந்த சிங்கள அரசாங்கத்திற்கு, யுத்தம் முடிவடைந்த பின்னரும் தமிழர்களை அடக்குமுறைக்குள் வைத்துக் கொள்வதற்காக மகிந்த அரசாங்கமும் அதன் படைகளும் தமிழர் தாயகப் பகுதிகளில் அடாத்தான நடவடிக்கையில் ஈடுபடுவதனை அவதானிக்கலாம். அதில் முக்கியமான ஒன்றுதான் அண்மையில் ஊடகவியலாளர்களை கஞ்சாவில் சிக்கவைக்க படைத்தரப்பு மேற்கொண்ட முயற்சியைக் கூறலாம்.
யாழ்குடாநாட்டில் நிலைகொண்டுள்ள சிங்களப் படைகள் மேற்கொள்ளும் தமிழ் பெண்கள் மீதான பாலியல் துஷ்ப்பிரயோகம், காணிக் கொள்ளை, பௌத்த விகாரை அமைக்கும் நடவடிக்கை, புதிது புதிதாக அமைக்கப்படும் இராணுவ முகாம்கள் மற்றும் அதனைச் சுற்றி மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்கள் போன்ற அநீதிகளை வெளியுலகுக்கு கொண்டுவருவதில் துணிச்சலுடன் போராடும் ஊடகப் போராளிகளை அடக்குவதினூடாக சிங்கள அரசு மேற்கொள்ளும் பயங்கரவாதச் செயற்பாடுகளை மறைக்கலாம் என்ற பிழையான கண்ணோட்டத்துடன் மகிந்த அரசு செயற்படுகிறது.
அத்துடன், தமிழ் மக்களை அடக்குமுறைக்குள் வைத்திருப்பதன் மூலம் 2009 ஆண்டு சிங்களப் படைகளினால் அரங்கேற்றப்பட்ட இன அழிப்பு மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றுக்கு எதிரான சர்வதேச விசாரணைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என்ற குறுகிய மகிந்த சிந்தனையையும் அரச தரப்புக் கொண்டுள்ளது. இன அழிப்பை மேற்கொண்ட மகிந்த அரசாங்கம் இன்று காணி அபகரிப்புக்களை மேற்கொண்டுவருகிறது. இது ஒரு சாதாரண விடயமாக கொள்ள முடியாது. மகிந்தவின் சிந்தனை என்பதனை விட உலக நாடுகளின் திட்டமும் இதுதான்.
தமிழர்களின் காவற் தெய்வங்களாக போற்றப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக சித்தரித்துக் காட்டிய சிங்கள அரசாங்கத்திற்கு ஊக்க மருந்துகளை வழங்கி அந்த தெய்வங்களை அழித்தொழித்த உலக நாடுகள் இன்று தலைமைத்துவமற்ற அநாதைகளாக உள்ள தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டத்தைப் பெற்றுக் கொடுப்பது தொடக்கம் மக்களின் காணிகள் அபகரிப்பைத் தடுப்பதில் கூட உலக நாடுகள் எவ்விதமான நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.
2009ம் ஆண்டுக்குப் பின்னரான காலப் பகுதியில் விடுதலைப் புலிகள் நிலைகொண்டிருந்த மற்றும் மக்களின் இடங்களையெல்லாம் நூற்றுக் கணக்கான ஏக்கர் விஸ்த்தீரணத்தில் காணிகள் அபகரிக்கப்பட்டு பாரியளவில் இராணுவ முகாம்கள், தென்பகுதியில் கூட அமைக்கப்படாத பௌத்த விகாரைகளை தமிழர்களின் பூர்வீகப் பகுதிகளில் சிங்களப் படைகள் நிர்மாணித்துவருகிறது. இதனைத்தடுப்பதற்கு தமிழ் தரப்பில் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கையும் மேற்கொண்டு நீதிமன்றத்தை நாடியும் கூட ஒரு தீர்வு பெறப்படாத நிலையில்தான், சர்வதேச உதவிகளை எமது மக்கள் நாடிச் சென்றார்கள். இதனை சர்வதேசம் ஒரு பொருட்டாகக் கூட கவனத்தில் கொள்ளவில்லை.
வடக்கு மாகாணமான வவுனியா தொடக்கம் யாழ்ப்பாணம் வரைக்குமான பிரதான ஏ9 நெடுச்சாலையில் யுத்த காலத்தில் அமைக்கப்பட்ட இராணுவ முகாம்களை விடவும் புதிதாக பல படை முகாங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாங்குளம் சந்தியில் பெரும் விசாலமான ஒரு பௌத்த விகாரையுடன் இராணுவ முகாமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காணி தனியாருக்குச் சொந்தமான காணி, அவ்வாறு மல்லாவி சந்தியில் பாரிய தொலைத் தொடர்பு கோபுரத்திற்கு அருகாமையில் பாரிய இராணுவ முகாம். இவ்வாறு இராணுவ முகாங்களை அமைத்து அதனைச் சூழ சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தி எதிர்காலத்தில் வடபகுதியில் தமிழர்களின் செறிவைக் குறைத்து அதனூடாக பாராளுமன்ற தமிழ் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் அரசாங்கம் நீண்ட காலத்திட்டத்தை அமுல்படுத்திவருகிறது.
வவுனியா தொடக்கம் யாழ் வரைக்குமான பிரதான வீதியில் 10 பேரைப் பார்த்தால் அதில் நான்கு பேர் ஆயுதப் படையைச் சார்ந்தவர்களாக உள்ளனர். அவ்வாறு வீதிகளில் படைகளின் ஊர்திகளையும் அவதானிக்க முடியும். போர்க்காலத்தில் ஓமந்தையில் அமைக்கப்பட்ட சிங்களப் படைகளின் மிகவும் பிரபலமான சோதனைச் சாவடி இன்றும் கூட அடையாள அட்டை பரிசோதனை உட்பட அனைத்தும் அதே பாணியில்தான் சோதனை நடவடிக்கைகளை படைகள் மேற்கொண்டுவருகின்றனர். இராணுவ மயமாக்கப்பட்ட சூழ்நிலையைத்தான் அவதானிக்க முடிகிறது. அதற்கு அமைவாகத்தான் சிவில் நிர்வாகத்தை கொண்டுநடாத்தும் ஆளுநராக கூட ஒரு போர்க்குற்றவாளியை மகிந்த அரசாங்கம் நியமித்துள்ளது. அதற்கு அமைவாகத்தான் அரச அதிகாரிகளையும் தன்னிச்சையாக இயங்க முடியாதளவுக்கு படைத்தரப்பினர் மிரட்டி வைத்துள்ளனர். மகிந்த அரசாங்கம் சொல்லும் கட்டளைக்கு இணங்காவிட்டால் இறுதிக் கட்டமாக ஒரு கஞ்சா முடிச்சு குறித்த அரச அதிகாரியின் மேசையில் இருக்கும்.
உலக நாடுகளிலிருந்து தலைவர்கள், அமைச்சர்கள், பிரதிநிதிகள் என எத்தனையோ பேர் வருகின்றார்கள் வடக்கு விஜயங்களை மேற்கொள்கின்றார்கள். மகிந்த அரசாங்கத்துடன் பல்வேறுப்பட்ட விடயங்கள் குறித்து ஆராய்கின்றார்கள். ஆனால் தமிழர் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சினைகள் குறித்து தீர்வுகள் எட்டப்படுவதாக தெரியவில்லை. அதுமாத்திரமல்ல சிறீலங்கா வரும் அனைத்து நாட்டு பிரதிநிதிகளும் வடக்கை மாத்திரம் மையப்படுத்தியதாக அவர்களின் விஜயத்தை மட்டுப்படுத்திக் கொள்கின்றார்கள். கிழக்கு மாகாணம் ஒன்று உள்ளது அங்கும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் உள்ளார்கள் என்பதை இவர்கள் மறந்துவிடுகின்றார்கள். அத்துடன், இந்த கூட்டமைப்பு கோமாளிகளும் இதனைப் பற்றி சிந்திப்பதாக தெரியவில்லை.
இராணுவச் செயற்பாடுகளின் ஒரு வடிவமாக தற்போது புதிய திட்டத்தை மகிந்த அரசாங்கம் அறிமுகப்படுத்திவருகிறது அதாவது, தமிழ் பகுதிகளின் அபிவிருத்திக்கென ஒதுக்கப்படும் நிதி ஆளுங்கட்சித் தரப்பினர்களினுடாகவே மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்திவருகிறது. அண்மையில் மூதூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் உட்பட ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் கட்டாயப்படுத்தி கூறியுள்ளார்கள்.
கமநெகுமத் திட்டத்தின் கீழ் கிராமத்திற்கு ஒரு அபிவிருத்தித் திட்டம் என்ற அடிப்படையில் ஒரு மில்லியன் ரூபா மத்திய அரசினால் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதியானது பிரதேச செயலகம் ஊடாக கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு வழங்கப்பட்டு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதுதான் வழமையானது.
ஆனால், மூதூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் இந்த அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் ஆளுந்தரப்பு அரசியல் கட்சி உறுப்பினர்களினூடாக மேற்கொள்ளப்பட வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சார் உட்பட்ட ஆளுந்தரப்பு அரசியல் வாதிகள் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அரசாங்கம் செய்வதன் பிரதான நோக்கம் அபிவிருத்தித் திட்டம் என நிதியை ஒதுக்கீடு செய்துவிட்டு மறுபுறமாக தனக்கு பொறுத்தமான ஆட்களினுடாக மீளவும் அந்த நிதியைப் பெற்றுக் கொள்வதாக அமைகிறது.
கிழக்கில் தமிழ் பகுதி தவிர சிங்கள மற்றும் முஸ்ஸிம் பகுதிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியானது அந்நதந்த கிராம அபிவிருத்திச் சங்களத்தினூடாக முன்னெடுக்கப்படுகிறது. ஆனால், தமிழ் பகுதிக்கு ஒதுக்கப்படும் நிதியை தமிழ் பகுதி கிராம அபிவிருத்திச் சங்கம் பொறுப்பெடுத்து ஆளுந்தரப்பினரிடம் கையளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மூதூர் கிழக்கில் 11 தமிழ் கிராம சேவகர் பிரிவு, மூதூர் மேற்கில் 9 தமிழ் கிராம சேவகர் பிரிவுள்ளது. இதில் ஆளும் தரப்பின் கட்டளைக்கு இணங்காத 10 கிராம சேவகர் பிரிவில் உள்ள கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை இரத்துச் செய்து சமூர்த்தி அதிகார சபையினூடாக மேற்கொள்ளளுமாறு கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் மூதூர் பிரதேச செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
இது தவிர குச்சவெளி, கிண்ணியா, தம்பலகாமம் போன்ற பகுதிகளில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. திருகோணமலை மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் ஆளுங்கட்சியினரின் அழுத்தம் காரணமாக இப்பிரச்சினைகள் மூடிமறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் பகுதிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை தமிழ் மக்கள் அமைப்புக்கள் கையாளுவதைத் தடுக்கும் இவ்வாறான செயற்பாடுகள் எதிர்காலத்தில் இனமுரண்பாடுகளை தோற்றுவிக்கும் காரணியாக அமையும். இதுவும் கூட தமிழர்களை அடக்கி ஒடுக்குவதன் ஒரு கட்டம்தான். கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையிலும் படை அதிகாரிதான் ஆளுநராக பதவி வகிப்பதனால் இராணுவச் சிந்தனையும், இராணுவ நடவடிக்கையுமாகத்தான் அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
-கிழக்கில் இருந்து எழுவான்-