சிறீலங்கா மகசின் சிறையில் மர்மமான முறையில் மரணமடைந்த விஸ்வலிங்கம் கோபிதாஸின் இறுதி நிகழ்வுகள் புலோலியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று அவரது பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கடந்த 24ம் திகதி மகசின் சிறையில் மரணமடைந்த கோபிதாஸின் உடல் அரவது சொந்த ஊரான புலோலிக்கு எடுத்து வரப்பட்டு இன்றுஇறுதிநிகழ்வுகள்நடைபெற்றன.
இவரது இறுதி நிகழ்வில் அரசியல் தலைவர்கள் மக்கள் என பலரும் கலந்து கொண்டு தமது இறுதி வணக்கத்தைசெலுத்தினர். அவரது சொந்த மண்ணில் அவரது இறுதிநிகழ்வுகள் நடைபெற்று பூதவுடல் சிறீலங்கா காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களை கடத்துவதற்கு உதவினார் என்று இவர் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு 5வருடங்கள் சிறையில் இருந்துவந்தவர். எனினும் கடந்த 24 ஆம் திகதி மலசல கூடத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தமை தெரிந்ததே.
எனினும் இவர் இருதய நோய் வாய்ப்பட்டவர் அவர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்ததாக சிறீலங்காஅரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை அவரது மரணம் திட்டமிடப்பட்ட கொலையெனவும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை உயிரிழந்த விஸ்வலிங்கம் கோபிதாஸின் மரணத்திற்கு நீதியான விசாரணை வேண்டுமென கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த கவனயீர்ப்புப் போராட்டம் புலோலி மெதடிஸ்த தமிழ் கலவன் பாடசாலைக்கு முன்பாக நடத்தப்பட்டது.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ‘கோபிதாஸின் மரணம் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும்’ தமிழ் கலாசாரத்தை அழிப்பதை நிறுத்தி விடு’ சிறீலங்கா படைகளைவெளியேற்று’ ‘சுயநிர்ணய உரிமையை அங்கீகரி’ ‘காணமற்போனவர்களுக்கு சிறீலங்காஅரசே பொறுப்பு கூறு’ ‘அரசியல் கைதிகளை உணவு, மருந்து இன்றி சாவடிக்காதே’, ‘விடுதலை செய் விடுதலை செய் அரசியல் கைதிகளை விடுதலை செய்’ ,புணர்வாழ்வில் உள்ளவர்களை உடனடியாக விடுதலை செய், கொல்லாதே கொல்லாதே, சுய நிர்ணய உரிமையை அங்கீகரி போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..
அதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மாவை சேனாதிராஜா, சரவணபகவான் ,மாகானசபை உறுப்பினர்கள் அனந்தி சசிதரன், சிவயோகன், சுகிர்தன், கஜதீபன், ஜங்கரநேசன் ஆகியோரும் கலந்துகொண்டதுடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீகாந்தா மற்றும் தென்னிலங்கை அரசியற் கட்சிகளின் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
அத்துடன் ஆர்ப்பாட்டத்தை குழப்பும் வகையிலும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் 50 இற்கு மேற்பட்ட சிறீலங்கா புலனாய்வுப் பிரிவினர் அங்காங்கே நின்றதுடன் நிகழ்வில் புகைப்படங்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.