இலங்கையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளராக இருந்த சிசிர மென்டிசுக்கு எதிரான சித்திரவதைக் குற்றச்சாட்டு அறிக்கைக்கு, இலங்கை அரசாங்கம் பதிலளிக்கத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் , சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழு கேள்வி எழுப்பியுள்ளது.
முன்னாள் குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைவர் மீது சுமத்தப்பட்டுள்ள சித்திரவதைக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க நீதிப் பொறிமுறை ஒன்றை உருவாக்குமாறு கோரும், அறிக்கை ஒன்றை சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழு சமர்ப்பித்திருந்தது.
இந்த நிலையில் குறித்த அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்கத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழு இலங்கை அரசாங்கத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழுவின் அவதானிப்புகள் வெளியிடப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேலாகியும், தமது குழு கோரிய தகவல்கள் இன்னமும் வழங்கப்படவில்லை என்றும்,
சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழு, ஜெனிவாவில் உள்ள இலங்கை தூதுவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் 59ஆவது அமர்வில், இந்த விடயம் கலந்துரையாடப்பட்டு, அறிக்கைக்குப் பதிலளிக்க 2017 டிசெம்பர் வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
மேலும் 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜெனிவா அமர்வில் பங்கேற்ற இலங்கை குழுவில், சிசிர மென்டிஸ் உள்ளடக்கப்பட்டிருந்ததை அடுத்து குறித்த விவகாரம் பூதாகாரமாக உருவெடுத்தமை குறிப்பிடத்தக்கது.