சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் பொன்விழா ஆரம்ப நாள் நிகழ்வுகள் இன்று மன்ற செயலாளர் இ.தேவசகாயம்பிள்ளை அவர்களின் தலைமையில் சிறப்புற நடபெற்றது.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், அமெரிக்க மிஷன் சபையினைச் சேர்ந்த தேவராஜ் அடிகள், ஜெகதீஸ்வரக் குருக்கள், சாவகச்சேரி இந்துக் கல்லூரி அதிபர் திரு கைலாயபிள்ளை, பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு ஜஸ்ரின், சாவகச்சேரி பிரதேச சபைத் தவிசாளர் துரைராஜா, பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்,
இயேசு பிரான் உலகில் மானிட விடுதலைக்காக ஒரு மனிதனாகப் பிறந்து இம் மானிடர்களுக்காக என்னென்ன துன்பங்களை அனுபவிக்க வேண்டுமோ அத்துன்பங்களை எல்லாம் இம் மண்ணிலே அனுபவித்து இறுதியிலே அவர் மக்களுக்காக சிலுவையில் அறையப்பட்டார்.
மக்களுக்காக மரணித்து அம் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த அவர் உலக மானிடர்களுக்கெல்லாம் ஒரு உதாரணமாக விளங்குகிறார். அதனால் தான் அவருக்கு இந்த உலகிலேயே உயரிய இறை அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
இறை பக்தரின் மகனாக உதித்த அவருக்கு இறை அந்தஸ்து வழங்கப்பட்டதன் நோக்கம் மானிடர்களின் விடுதலைக்காக போராடிய முதல் மனித உரிமைப் போராளியாக அவர் பார்க்கப்பட்டிருப்பதுதான்.
அவரது பிறப்பின் 2013 வருடங்கள் கடந்து புதிய ஆண்டு தொடங்குகின்ற இந்த நாளில் சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் பொன் விழா ஆரம்பக் கொண்டாட்ட நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டிருப்பது மிகவும் சிறப்புக்குரியதொன்றாகும்.
இன்றைய நாள் ஒரு மன மகிழ்ச்சிக்குரிய நாள். இந்த நாளில் இச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த எல்லாம் வல்ல இறைவனுக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாந்தர்கள் எப்போதும் நினைப்பது நாளைய நாள் சிறப்பாக அமைய வேண்டுமென்று. ஆனாலும் அந்த நாளை நன்றாக ஆக்க வேண்டுமென்பதற்கான எமது முயற்சி சற்றுக் குறைவாகத்தான் இருக்கிறது.
இதற்குச் சிறந்த உதாரணமாக அமெரிக்காவின் பிரபல வழக்குரைஞரும் பிரதம நீதியரசர்களில் ஒருவராக இருந்த ஜிப்றி என்பவர் தமது சுயசரிதையில் “ அதிஸ்டமானது ஒவ்வொரு மனிதனையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் தேடி வரும். அந்த அதிஸ்டம் தேடி வராது. நாம் அதிஸ்டத்தினை அடையும் பொருட்டு உழைக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் என் சிவந்த குழி விழுந்த கண்களால் சட்டப்புத்தகத்தைப் புரட்டிப் பார்க்கும் பொழுது அதிஸ்டம் என்னைத் தேடி வந்திருக்கிறது” என்று கூறியுள்ளார்.
அவர் கூறியது போல அதிஸ்டங்களை நாம் தேடிப் போகவேண்டுமே தவிர அதிஸ்டங்கள் எம்மைத் தேடி வரும் என வெறுமனே இருப்பதால் எதுவும் நடந்து விடப்போவதில்லை. இதற்காக நாம் பல இடர்களை, பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரலாம். பிரச்சனைகளை எதிர் கொண்டு வாழும் மனப்பாங்கு, பக்குவம், துணிச்சல் ஆகியவற்றை எதிர்கொள்வதற்கான தத்துவங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
மனித உள்ளங்களைத் துல்லியமாக ஆராய்ச்சி செய்த காப் மேயரின் நூல்களை வாசித்தறிவதன் மூலம் உலகை வெற்றிகொள்ளக்கூடிய தத்துவங்களை அறிந்து கொள்ளலாம். அதன்படி நாங்கள் இந்த உலகை வெல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.
கடந்த கால ஆண்டுகளின் துன்ப துயரங்களை மனதில் வைத்திருப்பதை விட அவற்றை ஒரு பாடமாகக் கொண்டு எதிர்வரும் ஆண்டுகளை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும்.
துன்பங்கள் எமது தலைக்கு மேலாகப் பறக்கின்ற கழுகுகள் போன்றன. அக் கழுகுகள் எமது தலைகளில் கூடு கட்டுவதை நாம் அனுமதிக்க முடியாது. எமது தமிழினம் இவ்வளவு காலமும் பட்டுவந்த துன்பங்கள் துயரங்களுக்கு 2014 ம் ஆண்டு ஒரு வடிகாலாக அமைய வேண்டும். அதற்காக நாம் எல்லோரும் உழைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.