44 ஊடகவியலாளர்கள் ஊடக பணியின் போது படுகொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவர்கள் நினைவாக குறித்த நினைவு தூபி அமைக்கப்பட்டுள்ளது.யாழ்.ஊடக அமையம் மற்றும் ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டு குழு இணைந்து அமைத்திருந்த தூபியை இன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் சிறிய தந்தையார் லோகநாதன் ,வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கஜயந்த கருணாதிலக்க ,பிரதி அமைச்சர் கருணாசேன பரணவிதான ஆகியோர் இணைந்து திறந்து வைத்துள்ளனர்.
தாயக மற்றும் இலங்கை ஊடகவியலாளர்கள், ஊடகத்துறை அமைச்சர், முதலமைச்சர், ஆகியோர் நினைவு தூபியில் தமது ஒப்பங்களை இட்டு நினைவு கூர்ந்து கொண்டனர்.ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி தமிழ் மற்றும் சிங்கள மொழியினில் கோசங்களை ஊடகவியலாளர்கள் எழுப்பினர்.
இந்நிகழிவினில் இருநூறிற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் தாயக மற்றும் இலங்கை ஆகிய இடங்களிலிருந்து பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.