வடக்கு மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் இயங்கிய பாடசாலைகள் யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் இயங்கியது.
இவ்வாறு இயங்கும் பாடசாலைகள் யுத்தம் நிறைவடைந்தும் சொந்த இடம் திரும்பாத நிலையிலும் இங்கு பணியாற்றுகின்ற ஆசிரியர்களிற்கான கொடுப்பனவு முதல் சகல செலவுகளும் வட மாகாண நிதியில் இருந்தே வழங்கப்பட்டு வருகின்றது.
இது தொடர்பில் கடந்த 2014ம் ஆண்டின் இறுதியில் குறித்த பாடசாலைகளை மன்னாருக்குத் திரும்ப வேண்டும். அல்லது தற்போது இயங்கும் மாகாணத்துடன் இணைந்து கொள்ளவேண்டும் என வட மாகாண கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியது.
இருப்பினும் அங்கு கற்பித்த ஆசிரியர்கள் 6 மாதகால அவகாசம் கோரியிருந்தனர். பின்னர் இதன் நிறைவில் மீண்டும் நெருக்கடி ஏற்பட்ட வேளையில் வட மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் ஊடாக தொடர்பு கொண்ட ஆசிரியர்கள் தமக்கு மீண்டும் சந்தர்ப்பம் அளிக்குமாறு கோரியிருந்தனர்.
இவர்களின் கோரிக்கையின் பிரகாரம் வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவினால் மேலும் ஆறு மாத காலம் சந்தர்ப்பம் வழங்கப்பட்டபோதும் இப்பாடசாலைகளில் கற்பித்தல் செயல்பாட்டில் உள்ள 167 ஆசிரியர்களில் உள்ள 30 ஆளணியினரும் உடனடியாக சொந்த வலயம் திரும்பவேண்டும். என முடிவாகியிருந்த்து.
இருப்பினும் இச் சந்தர்ப்பகாலமும் நிறைவடைந்தபோதிலும் குறித்த ஆசிரியர்கள் 167 பேரும் சொந்த வலயம் திரும்பாத காரணத்தினால் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் மேற்படி ஆசிரியர்கள் அணைவரையும் புத்தளம் மாவட்டத்திற்குரிய வலய மாகாணமாகிய வட மேல் மாகாணத்துடனேயே இணைத்துக் கொள்ளுமாறு வட மேல்மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண கல்வி அமைச்சர்களிற்கு என்னால் இரு தடவைகள் கடிதம் அனுப்பப்பட்டன.
இருப்பினும் அதற்கான பணி இடம்பெறாதமையினால் மீண்டும் தொடர்பு கொண்டதனையடுத்து குறித்த பாடசாலைகள் அனைத்தையும் வட மேல் மாகாணத்துடன் இணைப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் மத்திய அமைச்சர் ஒருவரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதனால் அதன் அனுமதி கிடைக்கப்பெற்றதும் குறித்த 6 பாடசாலைகள் ஆசிரியர்கள் அனைவரும் நிரந்தரமாக புத்தளத்துடன் விரைவில் இணைக்கப்படுவார்கள் . என்றார்.