திருகோணமலை – சம்பூர் பகுதியில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அனல் மின்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வியாழக்கிழமை அமைதிப் போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.
பசுமை திருகோணமலை அமைப்பின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் மூதூர்- சந்தோசபுரம் பகுதியில் நடத்தப்படவுள்ளது. திருகோணமலை மாவட்டத்தையே முழுவதுமாக பாதிக்கும் அனல் மின்னிலைய செயற்பாடுகளை தடுத்து நிறுத்த கோரி மூதூர் சந்தோசபுர கிராமத்தில் 200 இற்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்றிணைந்து அமைதிப் போராட்டத்தை நடத்த உள்ளனர்.
அத்துடன் நாட்டின் பூர்வீகக் குடிமக்களான வேடுவர் இனத்தவர்களும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்ளவிருப்பதாக பசுமை திருகோணமலை அமைப்பு தெரிவித்துள்ளது.