இந்தியாவின் நிலைப்பாடு குறித்து கருத்து வெளியிடப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி அறிவித்துள்ளது.இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்படுவதனை ஆதரிக்கவில்லை என இந்தியா அறிவித்துள்ளது.அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பிரிஸிடம் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இதனைத் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என கொழும்பு ஊடகமொன்று கேள்வி எழுப்பியிருந்தது. இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது இந்தியா தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தியிருந்தது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பநத்ன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு புதிதாக சொல்ல ஒன்றுமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை, இந்திய அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், தமிழக அரசியல் தலைவர்களுடன் சந்திப்பு நடாத்த உத்தேசித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.சந்திப்பு நடாத்துவதற்கான கோரிக்கை ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.இந்தியாவின் பதிலுக்காக காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.