போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுக் காசோலை வழங்கும் நிகழ்வு இன்று காலை யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.அதில் கலந்து கொண்ட பயனாளி நிகழ்விற்கு தமிழ்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களையோ அல்லது வடமாகாண சபை உறுப்பினர்களையோ அழைக்காமைக்கு என்ன காரணம் என சிறீலங்காஅதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது ,போரில் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு தொகுதியினருக்கு இழப்பீட்டு காசோலை வழங்கும் நிகழ்விற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அழைக்கப்பட்டு அவரை உரையாற்றவும் நியமிக்கப்பட்டிருந்தார்.
அதன்போதே குறித்த முதியவர் எழுந்து இவர்களை எல்லாம் நிகழ்விற்கு அழைத்து உரையாற்ற அனுமதிக்கிறீர்களே ஏன் இந்த நிகழ்விற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரையோ அல்லது வடக்கு மாகாண சபை உறுப்பினர் எவரையும் அழைக்கவில்லை. இதற்கு என்ன காரணம் என கேள்வி எழுப்பியிருந்தார்.
அந்த நேரத்தில் நிகழ்விடத்தில் சலசலப்பு ஏற்பட்டது. எனினும் முதியவரின் கேள்வியை பொருட்படுத்தாத சிறீலங்கா அதிகாரிகள் தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரை உரையாற்றுமாறு அனுமதித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.