இலங்கை இராணுவ அதிகாரி கலன அமுனுபுரவை மாலியிலிருந்து திருப்பி அனுப்பப்படுவதை சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர் யஸ்மின் சூக்கா வரவேற்றுள்ளார்.
சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளரான யஸ்மின் சூக்கா இலங்கை இராணுவ அதிகாரி தொடர்பான விவகாரம் குறித்து அறிக்கையொன்றை விடுத்துள்ளார்
அதில் யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களிற்கு என்றோ ஒரு நாள் தங்களிற்கு நீதி கிடைக்கும் என்ற சிறிய நம்பிக்கையை ஏற்படுத்தும் நடவடிக்கை இது என அவர் ஐநாவின் செயற்பாட்டை பாராட்டியுள்ளார்.
இலங்கையின் இராணுவ அதிகாரி தொடர்பாக தாங்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் அவரிற்கு எதிராக நடவடிக்கையினை ஐ.நா எடுப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது.
இது குறித்து தாங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
2009 ஆண்டு யுத்தத்தில் எத்தனை தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறித்து இன்னமும் தெரியாத நிலை காணப்படுகின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தகுற்றங்களில் ஈடுபட்டவர்கள் இனிமேலும் ஐநாவின் கௌரவாமான பதவிகளை வகிக்க முடியாது என்கின்ற வலுவான செய்தியை இந்த நடவடிக்கை தெரிவிக்கின்றது எனவும் ஜஸ்மின்சூக்கா கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.