தற்போது நல்லாட்சி ஏற்பட்டுள்ளதென சொல்லப்படுகின்றது ஆனால் சாதாரணமாக மாணவர்கள் கல்வி கற்க கூடிய சூழல் ஒன்று இல்லை பாடசாலைகளுக்கு முன்னால் இராணுவ முகாம்கள் காணப்படுதல் மற்றும் பாடசாலை வளாகங்கள் இராணுவப் பயன்பாட்டில் உள்ளமை மாணவர்களின் கல்வியை பெரிதும் பாதிக்கின்றன.
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவுக்கான காணி இன்னும் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது. ஏற்கனவே யுத்தத்திற்கு முன்னர் குறித்த காணியில் இரு கட்டடங்கள் அமைப்பதற்கான அத்திவாரம் போடப்பட்ட நிலையில் உள்ளதுடன், இதேபோன்று பூநகரி விக்கினேஸ்வரா வித்தியாலயத்தின் அருகிலும் பாடசாலை வளாகத்தில் பாரிய இராணுவமுகாம் இருக்கின்றது. இவற்றை அகற்றி மாணவர்களின் இயல்பான கற்றல் செயற்பாடுகளுக்கு நல்லாட்சியில் வழிவகை செய்யப்படவேண்டும்.
இதேவேளை பூநகரி விக்கினேஸ்வரா வித்தியாலயத்திலும் ஏனைய சில பாடசாலைகளும் இராணுவத்தின் சூழல் வட்டத்திற்குள் பாடசாலைகள் உள்ளன. விக்கினேஸ்வரா வித்தியாலயத்தில் இராணுவத்தினர் எந்த அனுமதியும் இன்றி அமைத்துள்ள கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இதனை வலயக்கல்விப் பணிப்பாளர் கவனத்தில் எடுக்கவேண்டும் எனவும் பாடசாலைகளுக்கு அருகில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றி வேறு இடங்களுக்கு கொண்டு செல்லவேண்டும். பாடசாலையில் இருக்கும் இராணுவ வலயம் நீக்கப்படவேண்டும் என்பதை எழுத்து மூலமாக வட மாகாண கல்வி அமைச்சு கோர வேண்டும். முழங்காவில் மகா வித்தியாலயத்தில் உள்ள ஆசிரியர் விடுதியில் இடம்பெற்ற சம்பவமும் அதன் பின்னர் இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறிய சம்பவமும் உள்ளது. எனவே பாடசாலைகளுக்கு அருகில் உள்ள இராணுவத்தினர் உடனடியாக வெளியேற்றப்பட்ட வேண்டும் எனவும் மாவட்ட சிவில் சமுக பிரதிநிதிகள் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.