இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் விஜயத்துக்கான பூர்வாங்க கிரிக்கெட் குழாத்தில் பெயரிடப்பட்டுள்ள வேகப்பந்துவீச்சு சகலதுறை வீரர்களான தனஞ்சய லக்ஷான், இஷான் ஜயரட்ன ஆகிய இருவரே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
இவர்கள் இருவரும் பங்களாதேஷ் கிரிக்கெட் விஜயத்துக்கான இலங்கை குழாத்தில் இடம்பெறவில்லை.
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் 40 பேர் கடந்த சனிக்கிழமை அன்டிஜென் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து அவர்கள் 40 பேருக்கும் கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டது. பங்களாதேஷுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு பெயரிடப்பட்டுள்ள இலங்கை வீரர்கள் எதிர்வரும் 16ஆம் திகதி பங்களாதேஷ் நோக்கி பயணமாகவுள்ளனர். பங்களாதேஷுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.