எதிர்க்கட்சி பதவி குறித்து கூட்டமைப்பு ஆராய்ந்து முடிவெடுக்கும் – இரா சம்மந்தன்

நாடாளுமன்ற விதிமுறைகளின்படி எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்கும் நிலை ஏற்பட்டால், அந்தப் பதவியை நாம் ஏற்பதா, இல்லையா என எமது கட்சி கூடி ஆராய்ந்து இறுதி முடிவெடுக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசு அமைத்துள்ள நிலையில் சுதந்திரக் கட்சி ஆளும் கட்சியாக மாறிவிட்டது. இந்நிலையில், நிமால் சிறிபால டி சில்வா ஆளும் கட்சியில் இருந்துகொண்டு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்கமுடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் அந்தப் பதவியில் தொடரமுடியாத நிலை ஏற்பட்டால் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பலம் பொருந்திய கட்சியாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்க வேண்டிய நிலை ஏற்படும்.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்தால் அந்தப் பதவியை ஏற்பீர்களா என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ள கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை நாம் நாடவும் இல்லை அந்தப் பதவி வேறொரு கட்சியில் உள்ளவருக்குச் சென்றடையக்கூடாது என்று நாம் எண்ணவும் இல்லை. வேறொரு கட்சியில் உள்ளவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பொறுப்பேற்றால் அதனை நாம் எதிர்க்கவும் மாட்டோம். ஆனால், நாடாளுமன்ற விதிமுறைகளின்படி எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே என்ற நிலைமை வருமானால் அந்தப் பதவியை நாம் ஏற்பதா, இல்லையா என்று எமது கட்சி கூடி ஆராய்ந்து இறுதி முடிவெடுக்கும்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி விடயத்தில் முன்னாள் அமைச்சர்களான தினேஷ் குணவர்த்தன, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ஸ, மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில மற்றும் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருக்கும் நிமால் சிறிபால டி சில்வா ஆகியோரின் தனிப்பட்ட கருத்துகளோ அல்லது கூட்டுக் கருத்துகளோ ஏற்றுக்கொள்ளப்படமாட்டா. நாடாளுமன்றத்துக்கென விதிமுறைகள் உள்ளன. அந்த விதிமுறைகளே எதிக்கட்சித் தலைவர் பதவி யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும். எனவே, தனிப்பட்டவர்களின் கருத்துகள் செல்லுபடியற்றதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இரா சம்மந்தன்எதிர்கட்சிகூட்டமைப்புசிறிலங்காதமிழ்தலைவர்தேசியநாடாளுமன்றம்நிமால் சிறிபாலபதவிமுறைப்படி
Comments (0)
Add Comment