கடன் சுமையில் வன்னி பெருநில விவசாயிகள்!

தாயகத்தின் வன்னிப்பெருநில பகுதியில் கனமழை வெள்ளப்பெருக்கினால் பாரிய அழிவுகளை எதிர்நோக்கிய விவசாயிகள், தாம் பெற்ற வட்டியினால் கடன்தொகை அதிகரித்துச் செல்வதாகக் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஸ்ரீலங்காவின் புதிய  அரசாங்கம் தமது பிரச்சினைகள் குறித்து, கவனம் செலுத்தாமல் பொறுப்பற்ற நிலையில், கண்மூடியிருந்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மஹிந்த அரசாங்கம் பெற்ற ஆடம்பரச் செலவுகளுக்கான பெருமளவு கடன் தொகையை மக்கள் பணத்திலிருந்து திருப்பிச் செலுத்தும் மைத்திரி அரசாங்கம்,

யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமது வாழ்வாதாரத்திற்காகப் பெற்ற கடன்தொகை அதிகரித்து செல்கின்றமை தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு எல்லாவற்றையும் இழந்த விவசாயிகள், மீள்குடியேற்றத்தின் போது 2010 ஆம், 2011 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் வங்கிகளிடமிருந்து பெற்ற விவசாயக் கடனைப் பயன்படுத்தி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதன்போது, ஏற்பட்ட கனமழை, வெள்ளப்பெருக்குக் காரணமாக விவசாயிகளின் பயிர்ச்செய்கைகள் அனைத்தும் முற்றாக அழிவடைந்தன.

இதனால் தாம் விவசாயத்திற்காக வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன்களை மீளச் செலுத்தமுடியாது கலங்கி நிற்பதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.

கடந்த ஆட்சியிலிருந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம், வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் விவசாயக் கடன்களை இரத்துச் செய்வதாகவும் மானியமாக்குவதாகவும் கூறியது.

இதனைக் கேள்வியுற்ற பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஓரளவு மன நிம்மதியடைந்த போதிலும் அது நீடிக்கவில்லை எனக் குறிப்பிட்டனர்.

மஹிந்த அரசாங்கத்தின் கூற்று வெறும் வாய்ப்பேச்சளவில் மட்டுமே இருந்தமை தான் அதற்குக் காரணம் எனக் குறிப்பிட்ட விவசாயிகள்,

விவசாயக் கடன்களை வழங்கிய வங்கிகள், விவசாயிகளுக்கு கடன் தொகையைத் திருப்பிச் செலுத்துமாறு கடிதம் மூலம் அறிவித்தும், விவசாயிகளது வீடுகளுக்குச் சென்று பாதிக்கப்பட்ட விவசாயிகளை வாய்க்கு வந்தவாறு தரக்குறைவாகக் ஏசியதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலர் அப்போது பெற்ற விவசாயக் கடன்களை தற்போது வரை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் வங்கி நடவடிக்கைகள் எதிலும் ஈடுபட முடியாதவர்களாக கடன் சுமையுடன் அவலப்படுகின்றார்கள்.

வட்டியுடன் அதிகரித்த கடன் தொகையை உடனடியாகத் திருப்பிச் செலுத்துமாறும் திருப்பிச் செலுத்தாதவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகு உட்படுத்தப்படுவார்கள் எனவும் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

விவசாயக் கடன் பெற்ற கடனாளியாக உள்ளவர்கள் தமது அவசர தேவையின் நிமிர்த்தம் வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள், உறவினர்களிடம் பண உதவி கோரி தமது வங்கிக் கணக்கு இலக்கத்தைக் கொடுத்தபோது அந்த வங்கிக் கணக்குக்கில் அனுப்பப்பட்ட பணத்தை உரியவரிடம் வழங்குவதற்கு வங்கிகள் மறுத்ததுள்ளன.

அத்துடன், விவசாயக் கடன் தொகையை வட்டியுடன் கட்டியதன் பின்னர் அனுப்பப்பட்ட பணத்தை வழங்குவதாகக் கூறியதாகவும் பாதிக்கப்பட்ட பல விவசாயிகளால் கூறியுள்ளனர்.

விவசாயக் கடன் தொகையைக் கட்ட முடியாத பாதிக்கப்பட்ட விவசாயிகள் சிலர் தற்கொலை செய்துகொண்டுள்மை ஊடகங்களில் வெளிவந்த உண்மையாகவுள்ளன.

விவசாயக் கடன் தொகைகள் ஒரு முடிவின்றிய நிலையில் கடன் சுமை தாங்க முடியாத கலக்கத்துடன் பல விவசாயிகள் பாதிக்கப்பட்ட நிலையில் விரக்தியுடன் காணப்படுகின்றார்கள்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கடன்சுமை வட்டியினால் அதிகரித்துச் செல்கின்றமை தொடர்பில் ஆட்சியாளர்கள் எவருமே இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை.

கடன்தொகைதாயகம்யுத்தம்வன்னிவிவசாயிகள்வெள்ளம்
Comments (0)
Add Comment