குடிநீர் இன்றி தவிக்கும் யாழ்.கந்தரோடை முகாம் மக்கள்

யாழ். கந்தரோடை பிள்ளையார் முகாம் மக்களுக்குத்  நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மூலமாக விநியோகம் செய்து வந்த குடிநீர் விநியோகம் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால்  முகாமில் வசிக்கும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். யுத்தம் காரணமாக கடந்த 1990ம் ஆண்டு வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் யாழ். கந்தரோடையில் தனியாருக்குச் சொந்தமான காணியொன்றில் பெரும் சிரமத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்றார்கள்.

இராணுவத்தால் இதுவரை காலமும் விடுவிக்கப்படாத தங்களின் காணிகளை இழந்த நிலையிலுள்ள மயிலிட்டி, தையிட்டிப் பகுதிகளைச் சேர்ந்த இவர்கள் கூலித் தொழிலேயே தமது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளார்கள். அடிப்படை வசதிகள் இன்றி அல்லல் படும் வாழ்வை வாழ்ந்துக்கொண்டுள்ள இவர்களுக்கு குடி நீர் இன்றி மேலும் நெருக்கடியான சூழலில் வசிக்க வேண்டியுள்ளது. இதுவரை காலமும் முகாமிற்கு அருகில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஊடாக விநியோகிக்கப்பட்டு வந்த நீர் மூலம் மக்கள் தமது குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்து வந்தனர்.

குடிநீர் விநியோகத்துக்கென, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு முகாமிலுள்ள குடும்பம் ஒவ்வொன்றும் பணம் செலுத்தியும் வந்துள்ளனர். இந்த நிலையில் நீர் விநியோகத்துக்கான பணம் செலுத்தப்படவில்லை எனத் தெரிவித்து முகாம் மக்களுக்கான குடிநீர் விநியோகம் முற்றாக தடைப்பட்டுள்ளது. இதனால், முகாம் மக்கள் சுமார் ஒரு கிலோ மீற்றருக்கும் அப்பால் சென்றே குடிநீரைப் பெற்றுக் கொள்ள வேண்டிய சூழ் நிலை உருவாகியுள்ளது. மேலும் அண்மையில் முகாமின் நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக வருகை தந்த சிறுவர், மகளிர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் குடிநீர் நிறுத்தப்பட்டமை தொடர்பிலும், இதனால் முகாம் மக்கள் எதிர்நோக்கி வரும் அசெளகரியங்கள் தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டது.

உயரதிகாரிகளிடம் பேசிக் குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் உறுதியளித்தனர். எனினும், இதுவரை முகாம் மக்கள் எதிர்நோக்கும் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கந்தரோடைகுடிநீர்தவிப்புநீர்வழங்கல்பிள்ளையார்மக்கள்முகாம்யாழ்ப்பாணம்வடிகாலமைப்பு
Comments (0)
Add Comment